திண்டுக்கல்,
பள்ளிகளில் பாலியல் கல்வியை கொண்டு வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி வலியுத்தினார்.
திண்டுக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய வாசுகி பேசியதாவது:
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதனை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மனமில்லை. இப்போது 50 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது.
நந்தினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். 15 வயதே ஆன அவள் கர்ப்பமடைகிறாள். தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது தொடர்பாக நடைபெற்ற ஒரு விவாதத்தில் எல்லோரும் அந்த சம்பவத்தை கண்டித்தார்கள். ஆனால் ஊடக செய்தி வாசிப்பாளராக இருந்து அதிமுக பிரமுகராகியுள்ள நிர்மலா பெரியசாமி நந்தினியை அவளது பெற்றோர்கள் வளர்த்த விதம் சரியில்லை என்று பேசினார்.
நந்தினியை இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் மணிகண்டன் என்ற இளைஞர் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. நந்தினியை 4 நாட்கள் அடைத்து வைத்து மணிகண்டனும் நண்பர்களும் கும்பல் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளனர். நந்தினியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று டி.என்.ஏ. ஆய்வு மூலம் தெரிந்துவிடுமோ என்று கருதிய மணிகண்டன் நந்தினியின் பிறப்புறுப்பில் பிளேடால் கிழித்து கருவை வெளியே எடுத்திருக்கிறான். அதனையடுத்து நந்தினியின் அழுகிய உடலில் துர்நாற்றம் ஏற்படும் என்பதால் அதனை மறைக்க ஒரு நாயைக் கொன்று அந்த நாயின் உடலோடு நந்தினியின் உடலையும் கட்டி கிணற்றில் வீசியுள்ளான்.
இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு ஆதரவாக பேசாமல் நிர்மலா பெரியசாமி நந்தினியின் வளர்ப்பு சரியில்லை என்று பேசுகிறார். பெண்ணையே பெண்ணுக்கு எதிராக மாற்றுவது, பெண்ணுக்கு எதிராக பெண்ணே பழிபோடுவது என்பதெல்லாம் ஆணாதிக்க சமூக சிந்தனைகள். ஆணின் பெற்றோர் சரியாக வளர்க்கல்லை என்று கூறலாமா? ஹாசினி என்ற குழந்தைக்கு 7 வயது தான் ஆகிறது. அந்த குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிகொலை செய்யப்பட்டு எரிக்கப்படுகிறார். அப்படி என்றால் ஹாசினியின் பெற்றோர்களது வளர்ப்பு சரியில்லை என்று கூறுவதா? பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்கள் தமிழ், அறிவியல், வரலாறு என்று எந்த பாடம் எடுத்தாலும் அதில் பெண்களின் நிலைமைகள், உரிமைகள் குறித்தான விவாதத்தை நிகழ்த்த வேண்டும்.
சட்டத்தின் முன் ஆண் பெண் சமம். பாலியல் கல்வி என்றாலே பலர் அலறுகிறார்கள். பாலியல் கல்வி என்றால் ஒரு குழந்தையிடம் எந்த எந்த இடத்தில் ஒரு ஆண் தொட்டால் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அல்லது கூச்சலிடவேண்டும். ஆபத்து வரும் போது எப்படி  சமாளிக்க வேண்டும்  என்று ஒரு விழிப்புணர்வுக்காக சொல்லித்தருவது தான் பாலியல் கல்வி. நாம் பாலியல் கல்வியை கற்றுத்தரவில்லை என்று சொன்னால் பிள்ளைகள் பாலியல் கல்வியை தவறாக கற்றுக்கொள்ளும். அதைத்தடுக்க பாலியல் கல்வி பாலின சமத்துவக் கல்வி இரண்டும் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.