ஈரோடு: ஈரோட்டில் ரூபாய் 25 ஆயிரம் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் பச்சிளம் குழந்தை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகில் ஒரு கும்பல் ஆண் குழந்தை ஒன்றை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையுடன் சுற்றித்திரிந்த ஒரு கும்பலை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கும்பல் பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தை சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-ரேஷ்மா தம்பதியின் நான்காவது குழந்தை என்றும், அவர்கள் வாங்கிய 25 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தாததால் குழந்தையை கடத்தி ரூ 2 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் பச்சிளம் குழந்தையின் பெற்றோர்களான பாலகிருஷ்ணன்-ரேஷ்மா ஆகிய இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் அவர்களுக்கும் இந்த குழந்தை விற்பனையில் தொடர்புள்ளதா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply