தங்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பது பெண் சமூகம் தான். பாலியல் துன்புறுத்தல் , பணியிடங்களில் சமமான மரியாதை, தனி மனித சுதந்திரம் இவ்வாறு பல காரணங்களுக்காக பெண் சமூகம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது. அந்த போராட்டத்திற்கும் நடுவிலும் பெண்கள் சாதிக்க தவறுதே இல்லை.

சாதனை ஆண்களையே எப்போதும் முன்னுதாரணம் காட்டி பேசும் இந்த சமூகம் பெண் சாதனையாளர்களை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. இப்படிப் பட்ட சமூகத்திலும் கலை முதல் அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த பல முதல் பெண்களில் சிலரைப் பற்றி…
முதல் ஆசிரியர்
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரிபாய் புலே மஹாராஷ்ட்ராவில் 1831 இல் பிறந்தார். இவரின் கணவர் ஜோதி ராய் புலே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்களை கொண்டு வந்தவர்களில் முக்கியமானவராவார். இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை புனேயில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர். அந்தப் பள்ளியின் முதல் ஆசிரியாராக சாவித்திரி பாய் செயல்பட்டார். பெண் கல்வி தொடர்பான பல கவிதைகளை இவர் எழுதியுள்ளார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக புனே பல்கலைக்கழகம் 2015 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
முதல் பட்டதாரிகள்
காதம்பினி கங்குலி மற்றும் சந்திரமுகி பாசு ஆகியோர்தான் இந்தியாவின் பெண் பட்டதாரிகள். இவர்கள் இருவரும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டப் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தனர். இதன் பிறகு சந்திரமுகி பாசு பொத்தூண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். காதம்பினி கங்குலி பட்டப்படிப்பை முடித்த பிறகு கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து மேற்கத்திய மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு கல்கத்தா லேடி டூப்ரின் மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார்.
முதல் விமானி
விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்ற இந்தியாவின் முதல் பெண் சரளா தாக்ரல். 1914 இல் பிறந்த இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் 1000 மணி நேரங்கள் விமானம் ஓட்டி சாதனை படைத்து இந்த உரிமத்தைப் பெற்றார். இவரின் கணவரான பி. டி. சர்மாவும் விமானி ஆவர். இவர் 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் விதவையான பிறகு இவர் வர்த்தக விமானங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார். சில காரணங்களுக்காக அது கிடைக்கவில்லை. அதன் பிறகு பைன் ஆர்ட்ஸ் படித்த இவர் 2008 இல் மரணடைந்தார்.
முதல் டாக்டர் பட்டம்
ஆர்கானிக் வேதியியல் பிரிவில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஆஸ்மா சாட்டர்ஜி தான் இந்தியாவில் அறிவியல் பிரிவில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவராவர். 1917 ஆம் ஆண்டு வங்காளத்தில் பிறந்த இவர் தன்னுடைய இளங்கலை பட்டத்தை ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார். அதன் பிறகு முதுகலை டாக்டர் பட்டங்களை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்பு லேடி பிராபோர்ன் கல்லூரியில் வேதியியல் துறை தலைவராக செயல்பட்டார். இந்திய அறிவியல் காங்கிரஸ் அசோசியேஷனின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.
முதல் நீதிபதி
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்னா சாண்டி 6 பிப்ரவரி 1959 அன்று கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். சட்டப்படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர் 1937 ஆம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் திவான் சி.பி ராமசாமி அய்யரால் திருவிதாங்கூர் முன்சீஃப் பதவியில் நியமிக்கப்பட்டார். பின்பு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார். 1976 ல் ஓய்வு பெற்ற இவர் தேசிய சட்ட ஆணைய உறுப்பினராகவும் செயல்பட்டார்.
முதல் ராணுவ பெண்கள்
இந்திய ராணுவத்தில் முதல் பெண் அதிகாரியாக சேர்ந்தவர் பிரியா ஜிங்கன். சட்டப்படிப்பை முடித்த இவர் 1993 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் மேஜராக பணியில் சேர்ந்து 2003 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது தந்தை காவல் துறை அதிகாரியாவார்.
ஹர்திகா கவுல் தேவல் இந்திய விமானப் படையில் சேர்ந்த முதல் பெண் விமானி. இவர் தன்னுடைய 22 வயதில் ஆப்ரோ எச்.எஸ் – 748 என்ற விமானத்தை ஓட்டி சாதனை படைத்தார். இவர் தரையிலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தை இயக்கியும் சாதனை படைத்தார். இவர் டிசம்பர் 25 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தார்.
முதலில் எவரெஸ்ட் ஏறியவர்
மலையேற்ற வீராங்கனை பச்சேந்த்ரி பால் 1984ல் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் 12 வயதில் தனது மலையேற்ற பயிற்சியைத் தொடங்கினார். அதன் பிறகு இமயமலை உள்ளிட்ட பல்வேறு மலைகளை ஏறிக் கடந்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இவரின் சாதனையைப் பாராட்டி பத்மஸ்ரீ, அர்ஜூனா உள்ளிட்ட பல்வேறு அரசு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன

Leave a Reply

You must be logged in to post a comment.