திருப்பூர்,

திருப்பூர் மாநகர பகுதிக்குள் வரும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர பகுதிக்குள் வரும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகன அதிகரிப்புக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும், பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்காகவும் காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கனரக மற்றும் இதர சரக்கு வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வர நேரம் மற்றும் வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15ம் தேதி முதல்  காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர எல்லைக்குள் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் இயக்கப்பட வேண்டும். எனவே பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்கண்ட விதிகளை கடைபிடித்து மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தில்லாத நகரமாக மாற்றுவதற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply