ராமேஸ்வரம்,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து 6ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில், 6ஆவது நாளாக போராட்டம் நீடித்துவருகிறது.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் இன்று  தங்கச்சிமடத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசு மீனவர்கள் பிரச்னைக்குரிய நடவடிக்கை எடுக்கும். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள். இறந்தவரின் உடலை பெற்று, அடக்கம் செய்யுங்கள் என்றார்.
நிர்மலா சீதாராமனின் கோரிக்கையை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் , கடந்த 35 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. வெறும் பேச்சுவார்த்தையை நம்பி போராட்டத்தை கைவிட முடியாது, என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்நிர்மலா  சீதாராமன், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். நியாயம் கிடைக்க பிரதமர் உறுதியான நடவடிக்கை எடுப்பார். இறந்த 6 நாட்கள் கடந்தும் ஒரு தாய் தன் மகனைப் பார்க்காமல் போராட்டக் களத்தில் இருக்கிறார். அவர், பொதுநலன் கருதி, தன் மகனின் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு, போராட்டக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார் இறந்த மீனவரின் தாய். நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply