திருப்பூர்,

கேரள அரசு பவானியில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத்திற்கு நீராதாரமாகத் திகழும் பவானி ஆற்றின் குறுக்கே கேரளாவில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்தியும், இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நதிநீர்ப் பங்கீட்டுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தட்டிக்கழிக்கும் மத்திய மோடி அரசை எதிர்த்தும், மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணக் கோரியும், இந்த விசயத்தில் இரு மாநில மக்களின் உறவை சீர்குலைக்கும் வகையில் சில அமைப்புகள் இனப்பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். கோரிக்கைகளை மையமாக வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உள்பட இரு கட்சிகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் பெருமளவு பங்கேற்றனர்.
ஏ.லாசர், நா.பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசியதை அடுத்து, ரயில் மறியல் செய்வதற்காக ரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் தடுப்புகளை மீறி இரு கட்சிகளின் தொண்டர்களும் முழக்கங்கள் எழுப்பியபடி ரயில்நிலையத்திற்குள் புகுந்தனர்.

ரயில் நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபாட்ட 50 பெண்கள் உட்பட சுமார் 250 பேரை காவலர்கள் கைது செய்து பார்க் சாலை பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்குக் கொண்டு சென்று சிறை வைத்தனர்.

Leave A Reply