திருப்பூர்,

தனியார் பெருநிறுவனங்களின் லாபப் பேராசைக்காகவே விளை நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர் என்று திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் தினகரன் கூறினார்.

திருப்பூர் அரிமா சங்க கட்டிடத்தில் சனியன்று மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து “ஹைட்ரோ கார்பனும், சுற்றுப்புறச் சூழலும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கை நடத்தின. இதில் மதுரா கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விளக்கிக் கூறினார்.
மக்களின் நலன் காக்கவே அறிவியல் ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் தனியார் பேராசைக்காக அறிவியல் ஆய்வுகளைப் பயன்படுத்துவது இயற்கைக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும். குறிப்பாக ஹைட்ரோ கார்பன் என்பது பூமிக்குள் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அழுத்த நிலையில் இருக்கும் படிம எரிபொருள் ஆகும். இதை துரப்பண செய்வதற்கு நிலத்தில் இருந்து 7 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு செங்குத்தாகத் தோண்ட வேண்டும். அத்துடன் உட்புறம் பரவிக் கிடக்கும் இந்த படிம எரிபொருளை உறிஞ்சி எடுப்பதற்கு கிடைமட்டமாக உள்ளே குழாய்களைச் செலுத்தி வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்வார்கள். இவ்வாறு செய்வதற்கு “ஹைட்ரோ பிராக்சர்” என்ற நீரியல் உடைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். இதற்கு மிக அதிக அளவுக்கு தண்ணீரும், சமபரிமாணங்கள் உள்ள மணலும் தேவை. இதைப் பயன்படுத்திடும்போது விளைநிலங்களில் உப்புத்தன்மை கொண்ட நீர் வெளியேற்றப்பட்டு விவசாய நிலம் உவர் நிலமாக மாறிப் போகும்.

மேலும் படிம எரிபொருள்கள் தற்போதுள்ள அளவை முழுமையாக எடுத்தால் அடுத்த 40 ஆண்டுகளில் அவை தீர்ந்து போகும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். பிறகு உலக மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படும். அத்துடன் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை துரப்பண செய்வதால் புவி வெப்பமாதல் அதிகரிக்கும் என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பலவகையிலும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

மகாத்மா காந்தியடிகள், “இந்த பூமியில் மனிதர்களின் தேவைக்கான வளங்கள் உள்ளன, ஆனால் மனிதர்களின் பேராசைக்கு அல்ல!” என்று கூறியுள்ளார். எளிய முறையிலான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமக்குத் துன்பமில்லை. ஆனால் தனியார் லாபவேட்கைக்காக இயற்கையைச் சிதைக்கும்போது பேரழிவு ஏற்படும். எனவே இத்திட்டம் ஏற்புடையதல்ல என்று முனைவர் தினகரன் தெரிவித்தார்.

முன்னதாக இந்த கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆ.ஈஸ்வரன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க நிர்வாகி ஆ.சிகாமணி வரவேற்றார். சமூக விஞ்ஞானக் கழக நிர்வாகி எஸ்.கண்ணன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி உள்பட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.விமல் நன்றி கூறினார்.

Leave A Reply