தமிழக அரசியலின் போக்கை புரிய ஆர்வமுள்ளோர் அவசியம் படிக்கவேண்டிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. ஒன்று புலவர் பா.வீரமணி எழுதிய ‘சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும்‘, மற்றொன்று இயக்குநர் பாலுமணிவண்ணன் எழுதிய ‘ஜெயலலிதா –
நடிப்பும் அரசியலும்’. ஒரு சமூகம் முன்னேறுகிறதா அல்லது நோய்க்களமாகித் தேங்கிநிற்கிறதா என்பதை அளக்கவேண்டுமானால் அங்கு நடக்கும் தத்துவப் போரின் தன்மையை கவனித்தால் போதும், போன நூற்றாண்டில் சிங்காரவேலர்- பெரியார்- ஜீவா இம் மூவரும் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் தொடுத்த சித்தாந்தப்போரின் தாக்கம் பற்றி நாம் அறிவோம், சித்தாந்தப்போரின் உள் அடக்கத் தரத்தை அறிவியலோடு இணைத்தவர் சிங்காரவேலர். சித்தாந்தப்போரில் மக்களையும் பங்கெடுக்கச் செய்யும் ஆற்றல்பெரியாருக்கு இருந்தது. வரலாற்றுப் பொருள்முதல் வாதநோக்கில் சுயமரியாதைக் கருத்தின் வேரை வள்ளுவரிலிருந்து கம்பன்வரை தேடிக்கொடுப்பவராக ஜீவா இருந்தார். அவர்களை
சிங்காரவேலரின் ஆற்றலை புலவர் வீரமணி நல்ல தமிழில் மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் தருகிறார்.
சுயமரியாதை கருத்தை சினிமாவில் புகுத்தி அதன் மூலம் அரசியலில் நுழைந்தவர் எம்,ஜி. ஆர். அவர் மூலம் அரசியலில் நுழைந்தவர் ஜெயலலிதா என்றே தோன்றும். ஆனால் இவரும் எம்.ஜி. ஆரைப் போலவே நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ஒரு புதுமைப்பெண்ணான தோற்றத்தை உருவாக்கியிருந்தார்.
இத்தகைய பிராண்ட்நேம் விளம்பர யுக்தியால் உருவான தோற்றத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் அமைப்பில் எவ்வாறு மிளிர்ந்தார் என்பதை பாலு மணிவண்ணன் புத்தகம் ஆதாரங்களோடு சொல்கிறது  அன்று சுயமரியாதை மூலம் மக்களும் பங்கேற்ற சித்தாந்தப்போரின் தன்மையையும், இன்று சினிமா மூலம் திணிக்கப்படும் கருத்துருவாக்கத்தையும் ஒப்பிட இவ்விரு புத்தகங்களும் நமக்கு உதவுகின்றன. ஊடகங்க
ளின் கருத்துருவாக்க முயற்சிகளுக்கெதிரான தத்துவப்போரில் உழைக்கும் மக்களையும் இணைக்க, ஸ்தூலமான தகவல்களுடன் புதிய வடிவம் அவசியமாகிறது என்
பதை இவ்விரு புத்தகங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் பற்றி நாம் அறிந்தது மிகக் குறைவே. நாம் கேள்விப்பட்டதெல்லாம் அவர் ஒரு தொழிற்சங்கவாதி, மேதினம் கொண்டாடியவர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயேசென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை புகுத்த முயற்சித்து வெற்றிபெற்றவர். மறைந்த பாரதியாரை எரியூட்டசென்ற 12பேரில் ஒருவராக இருந்தவர். இவரது நூலகம் மிகப்பெயரிது அன்றைய கன்னிமாரா நூலகத்தில் இல்லாத புத்தகங்கள் இந்த நூலகத்தில் இருந்தன. சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் அமைப்பாக செயல் பட்ட மூன்றாவது அகிலம் இவரை அமீர்கான் மூலம் நன்கு அறியும்.
ஆனால் சிங்காரவேலரின் பிற குணநலன்களைப் பற்றி நமக்கு அதிகம்தெரியாது. அவர் ஒரு சிறந்த சித்தாந்தப்போராளி. சித்தாந்தப்போரின் தன்மை எதிரியை வாதில்வெல்வதல்ல. எதிரியை தன் பக்கம் வரவழைப்பது. எதிரியின் ஒரு தலைப்பட்சமான பார்வையை சுட்டிக்காட்டுவது ஆகும். சித்தாந்த ரீதியாக பார்த்தால் ஆன்மீகவாதிகளே மார்க்சியத்தை வெறுப்பவர்கள் தாக்குபவர்கள்.
திரு.வி.க , தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற ஆன்மீகவாதிகளும் மார்க்சியத்தை சிங்காரவேலர் ஏற்க வைத்ததை மிக அழகாக இப்புத்தகம் காட்டுகிறது. அதைவிட தத்துவ மேதை எனப் புகழப்பட்ட டாக்டர் ராதா கிருஷ்ணனின் ஒரு தலைபட்சமான கருத்தை எதிர்த்து சிங்காரவேலர் எழுதியதையும் இப்புத்தகம் காட்டுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் இளைய சமூகம் சமதர்மத்தைப் படிப்பதின் மூலம் கெட்டுவிட்டது என்று கூறியதை விமர்சித்து எள்ளல் நடையில் அவர் எழுதியதை இப் புத்தகம் குறிப்பிடுகிறது.
அதாவது சிங்காரவேலர் நேர்மையான ஆன்மீக வாதிகளை மார்க்சியத்தை ஏற்கவைத்தார்; ஆஷாட பூதிகளை அம்பலப்படுத்தினார், அயோத்திதாசருக்கும், சிங்காரவேலருக்கும் இடையே நடந்த சொற்போர் பற்றி இப்புத்தகம் விரிவாக குறிப்பிடுகிறது. சிங்காரவேலர் அவர்காலத்திய சிந்தனையாளர்களோடு கடிதத் தொடர்பும், அவர்களது கருத்துக்களில் உடன்படுபவைகளை சுட்டிக்காட்டியும், அறிவியலுக்கு பொறுத்தமற்றவைகளை எடுத்துக்காட்டி எழுதியும் வந்ததை புலவர் வீரமணி தெள்ளுதமிழில் தந்துள்ளார்.
புலவர் வீரமணி கட்சி சார்பற்றவர்; ஆனால் அரசியல் மற்றும் சமூக இயலின் ஆய்வாளர் ஆவார். இவரது நண்பர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் வள்ளுவருக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் என்றால் இவருக்கு வள்ளுவரும், சிங்காரவேலரும் இரு கண்களாகும் என்று குறிப்பிடுகின்றனர்.
ஜெயலலிதா நடிப்பும் அரசியலும் என்ற புத்தகத்தை எழுதியவர் இயக்குநர் பாலு மணிவண்ணன் ஆவார். இவர் இந்தப் புத்தகத்தை தீக்கதிர் ஆசிரியர் தோழர் கே.முத்தையாவிற்கு சமர்ப்பித்து இருக்கிறார். இந்நூல் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா ஜோடி சினிமாவில் உருவாக்கிய தோற்றத்தை அரசியலுக்கு பயன்படுத்தியதை அழகாக சொல்கிறது. சில வெற்றிப்படங்களை குறிப்பிட்டு கதாபாத்திரங்கள் மூலம் தோற்றத்தை எவ்வாறு உருவாக்கினர் என்பதை விளக்குகிறார்.
‘வந்தாளே மகராசி’ என்ற சினிமாவில் ஜெயா இரட் டைவேடமிட்டு ஒரு அப்பாவிப்பெண்ணின் துயரங்களை துடைத்த ஒரு சாதுர்யமிக்க புதுமைப்பெண் என்ற பிம்பத்தை நிலை நிறுத்துகிறார். அத்துடன் அவரது ஆளுமையால் சர்வாதிகாரியாக கட்சியை நடத்த முடிந்தது என்பதை புரியும்படி விளக்குகிறார். கருணா நிதியால் கட்சியில் பிளவை தடுக்க இயலவில்லை, ஜெயா
வின் ஆளுமையால் அந்தக் கட்சி அவரது மறைவிற்குப் பின்னரே உடைந்தது. அவரது ஆளுமை மட்டுமல்ல தமிழக அரசியல் சூழல் அவருக்கு வாய்ப்புக்கொடுத்தது என்பதையும் இந்நூலைப்படிப்பவர்கள் உணர்வர்.
பகுத்தறிவுப் பாசறையில் இரண்டுவிதமான போக்குகள் இருந்ததை நாம் அறிவோம், ஒன்று எம்.ஆர். ராதா போன்றோர், மூடநம்பிக்கைக்கு எதிராகவும் ஆங்கில மோகத்திற்கு எதிராகவும் சினிமாவைப் பயன்படுத்தினர். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயா வகையறாக்கள் அ தனை அரசியல் சந்தையில் சரக்காக்கி சொத்து குவிக்க சினிமாவை பயன்படுத்தினர். இப்பொழுது
கருத்துருவாக்கும் ஊடகத் தொழில்நுட்பத்தால் சித்தாந்தப்போரின் தரம் குறைந்து போனது, பகுத்தறிவு பாசறை மூட நம்பிக்கைகளின் தொட்டிலாகிவிட்டது. சிங்காரவேலரின் அணுகுமுறையில் முற்றிலும் புதிய வடிவில் மக்களும் பங்களிக்கும் வகையில் ஒரு சித்தாந்தப்போர் இன்றையத்தேவை என்பதை இவ்விரு புத்தகங்களும் காட்டுகின்றன,

சிங்காரவேலரும்,
பிற சிந்தனையாளர்களும்,
ஆசிரியர்: புலவர் பா.வீரமணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
எண், 7 இளங்கோ சாலை.
தேனாம்பேட்டை
சென்னை 600018
பக்கம்: 189 விலை: ரூ. 150/ –
ஜெயலலிதா- நடிப்பும் அரசியலும்
ஆசிரியர்: பாலுமணிவண்ணன்.
வெளியீடு: யூனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ்
எண்: 8, 6 குறுக்குத் தெரு,
8வது நெடுஞ்சாலை
வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில்
சென்னை 600 109
பக்கம்: 184 விலை: ரூ. 150/-

-வே.மீனாட்சிசுந்தரம்

Leave a Reply

You must be logged in to post a comment.