மார்க்சிய அழகியல் என்ற இச்சிறு நூல் பேராசிரியர் நா.வானமாமலை எழுதி அலைகள் வெளியீட்டகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. படைப்பாளிகள் தமது படைப்பில் உருவம் உள்ளடக்கம் இரண்டிற்குமான கொள்கைகளில் எவ்வாறு சமூக இயக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மார்க்சிய கண்ணோட்டத்தில் இந்நூல் புரியவைக்கிறது.
மார்க்சிய அழகியல் தத்துவம் என்பது எல்லாவிதக் கலைப்படைப்புகளையும் விளக்குவதற்கு மார்க்சிய அறிதல் முறை தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அறிதல் முறைகளை சுரண்டும் வர்க்க தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும் விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின. இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களை கூர்மையாக்கியது. அறிதல் பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கூறுதான் மார்க்சிய பிரதிபலிப்பு கொள்கை. இப்பிரதிபலிப்பு கொள்கையிலிருந்து சோசலிச எதார்த்த கொள்கை தோன்றியது எப்படி என்பதை இந்நூல் விரிவாக விளக்குகிறது.
கலைப்படிவம் என்னும் அகவயப் பொருள்தான் எல்லாக் கலைப்படைப்பு
களுக்கும் அடிப்படையானது. இது எப்படித்தோற்றம் எடுக்கிறது, எப்படிக் கலைவடிவம் பெறுகிறது என்பதை ஆராய்ந்து அறிவதே எல்லாக் கலைகளையும் படைப்பதற்கு தேவையான தத்துவக் கூறு என மார்க்சிய அழகியல் நூல் விளக்குகிறது. “மார்க்சியம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில்
மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த கூர்மையுடைய மூளைகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்”. என லெனின் எழுதினார்.
“உலகம் முழுவதற்கும் தேவையான, பொருத்தமான, மகிழ்ச்சியூட்டக்கூடிய படைப்பே கலை. இத்தன்மையான படைப்பைச் செய்யக் கலைஞன் உலக மக்கள் முழுமைக்கும் பொறுப்பு உடையவனாகத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னுள், தான் சுருங்கிக்கொள்ளாமல் மனித இனத்தின் வாழ்க்கையில் தனது வாழ்க்கையை இணைத்துக்கொள்ள வேண்டும்”.
உண்மையான கலைஞன் தனது படைப்பை வாழ்க்கையிலிருந்துதான் தொடங்குகிறான். தான் காணும் மக்களைத்தான், தன்னை ஆகர்ஷிக்கும் மக்களைத்தான் கலைப்படைப்பாக ஆக்குகிறான். புறவயமான, ஸ்தூலமான, வரலாற்று ரீதியான நிலைமைகளில் வாழும் மக்களை, அவர்கள் வாழும் சமூகத்தின் வகைமைஆகக் கலைஞன் படைக்கிறான். கலைஞன் லட்சியவாதியாக இருக்கவேண்டும்.
பகற்கனவுகளைத் தோற்றுவிக்கிற இலக்கியங்கள் பயனற்றவை. வாழ்க்கையை மேன்மையும் சிறப்பும் உடையதாக மாற்றவல்ல இலக்கிய குறிக்கோள்களே பயனுள்ளவை.முதலாளித்துவ நச்சு இலக்கியவாதிகள் பரப்பியுள்ள பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது. உலக இலக்கிய வானத்தையே அசுத்தப்படுத்தி, மக்களின் நேர்மையான, ஆரோக்கியமான மனிதத் தன்மையையே அழித்துவிடும். எனவே சமூகத்தின் மீது அக்கரைகொண்ட படைப்பாளிகள் மார்க்சிய அழகியல் கொள்கையைப் புரிந்து கொள்ள பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் விமர்சனப் பூர்வமாக அணுகவேண்டும் என்பதே இந்நூலின் சாரம்.

மார்க்சிய அழகியல்,
ஆசிரியர்: நா. வானமாமலை
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண்: 5/1ஏ.இரண்டாவது தெரு,நடேசன் நகர், இராமாபுரம்,சென்னை-600 089
பக்கம்: 80 – விலை: ரூ.60/-

-பொன்.ராமகிருஷ்ணன்

Leave a Reply

You must be logged in to post a comment.