செங்கல்பட்டு,
செங்கல்பட்டு நகராட்சி நூற்றாண்டைக் கடந்த நகராட்சியாகும். வளர்ந்து வரும் நகரமான இங்கிருந்து சென்னைக்கு சென்றுவர மின்சார ரயில், பேருந்து வசதி அதிக அளவில் இருப்பதாலும், அருகில் திருப்பெரும்புதூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகி வருவதாலும் செங்கல்பட்டு நகரில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.
நகர மக்களின் சுப நிகழ்வுகளின் தேவைக்காக நகராட்சி அலுவலகம் அருகே, கடந்த 2000ம் ஆண்டு, நகராட்சி பொது நிதி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக் கூடம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் மீண்டும் 5 லட்சம் மதீப்பீட்டில் மேல்தளம் அமைக்கப் பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் பணிகள் முடிந்து  15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்த சமுதாயக் கூடம் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் மிக அருகில் அமைந்துள்ளது.
வளர்ந்து வரும் நகர்ப் பகுதியில் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மண்டபங்களில் வாடகை வசூல் செய்து வரும் நிலையில் கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இருக்கும் இந்த சமுதாயக் கூடத்தை கடந்த ஐந்து முறை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவினர் கண்டுகொள்ளவில்லை. தற்போது அரசின் இலவசப் பொருட்களை வைக்கும் குடோனாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே நகராட்சிக்கு சொந்தமான பழைய வாகனங்களை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம், நகரமன்றம் இவர்களிடடையே ஒற்றுமை இல்லாததாலும் பல வருடங்களாக நகராட்சிக்கு ஆணையர் இல்லாததாலும் பெரும்பாலான வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன. நூற்றாண்டு கடந்த நகராட்சி என்ற பெயரைத் தவிர வேறு எந்த சிறப்பும் இல்லாத நகராட்சியாகவே உள்ளதாக நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் அருணாச் சலம் கூறுகையில்,“ இந்த நகரத்தில் தனியார் மண்டபங்களில் ரூ. 25 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த சமுதாயக் கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருந்தால் ஏழை மக்கள் பயன் அடைந்திருப் பார்கள். நகராட்சிக்கு அதிகளவில் வருவாய் கிடைத்திருக்கும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் கொடுத்தோம். இருந்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.