பி.ஜே.பி தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்காரண சூழ்நிலைகளை உருவாக்குவதில் வெவ்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். உபி தேர்தல் சூத்திரம்தான் அவர்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.
ராமர் கோஷம்
உத்தரபிரதேசம் ஒரு மினி இந்தியாவைப் போன்றது. இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள். 1991- உ.பி சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தனர். கல்யாண் சிங் முதல்வர் ஆனார். ஆனால்,  பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், ஆட்சியை இழந்தது. 1997 தேர்தலிலும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற கோஷத்தையே பி.ஜே.பி முன் வைத்தது. எனினும் பி.ஜே.பி-பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாயாவதியின் துணையுடன் ஆட்சி அமைத்தனர். ஆட்சியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆட்சியை இழந்தனர்
குடும்பச் சண்டையால் வீழ்ந்தது சமாஜ்வாதி! உ.பி.யில் ஆட்சியமைக்கிறது பா.ஜனதா
மாநில கட்சிகள் ஆதிக்கம்
மத்தியில் ஆட்சியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தபோதிலும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனைத் தொடர்ந்து பி.ஜே.பி மீது விழுந்த மதவாத கறை ஆகியவற்றால் 2002-ம் ஆண்டு உ.பி தேர்தல் பி.ஜே.பிக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த தேர்தலுக்குப் பின்னர் உ.பி தேர்தல் களத்தில் இருந்தே பி.ஜே.பி அகற்றப்பட்டது என்றே சொல்லலாம். மாநில கட்சிகளுக்கு இடையேதான் நீயா, நானா போட்டி இருந்தது.2002 தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த சமாஜ்வாடி கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி துணையுடன் ஆட்சி அமைத்தது. முதலில் மாயவதி 1 வருடமும் சில மாதங்களும், இரண்டாவதாக முலாயம் சிங் யாதவ் 3 ஆண்டுகளும் சில மாதங்களும் முதல்வர் பதவியைப்  பகிர்ந்து கொண்டனர்.
3-வது இடத்தில்…
2007 தேர்தலில் மாயாவதி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். பி.ஜே.பி-க்கு கிடைக்க வேண்டிய முற்போக்கு சமுதாயத்தின் ஓட்டுக்கள் கூட இந்த முறை மாயாவதிக்கு கிடைத்த து. பி.ஜே.பி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
2012 தேர்தலிலும் பி.ஜே.பி-க்கு பெரிய ரோல் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டுக்கும் இடையேயான போட்டியாகவே இருந்தது. சமாஜ்வாடி கட்சியின் இளம் தலைவர் என்ற வகையில் அகிலேஷ் யாதவ் பிரசாரம் பெரும் அளவில் எடுபட்டது.
1997-க்கு பின் மதவாத கட்சி என்ற கறை, தலித்களின் வெறுப்பு ஆகியவற்றின் காரணமாக உ.பி-யில் கால் பதிக்கமுடியாமல் பி.ஜே.பி திணறிக்கொண்டிருந்தது. 2014 லோக்சபா தேர்தலில்தான் உ.பி மாநிலம் பி.ஜே.பி-க்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அப்போதே உ.பி-யில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு விட்டார்கள்.
வெற்றி கணக்கு
2014 செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநில பி.ஜே.பி தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமிக்கின்றனர். 47 வயதான இவர்தான் இப்போது பி.ஜே.பி-க்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.  பி.ஜே.பி தலைவர் அமித்ஷா ஆலோசனையுடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டார். யாதவ் ஓட்டுக்களை பிரிப்பதுதான் அவர்களின் முதல் வேளையாக இருந்தது. மத்திய உளவுத்துறை மூலம் முலாயம் சிங் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தினர். அகிலேஷ் யாதவுக்கு எதிராக அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவை திருப்பி விட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது ஒன்றாக இருப்பது போல முலாயம் குடும்பம் காட்டிக் கொண்டாலும், அகிலேஷ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்த்தது  ஷிவ்பால் குரூப்.
ஜாதி ஓட்டுக்கள்…
உ.பி-யில் ஒவ்வொரு தொகுதியையும் ஜாதி வாரியாக கணக்கிட்டு, அந்த தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் என்று பார்த்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது பி.ஜே.பி. தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக்கூட பி.ஜே.பி நிறுத்தவில்லை. மதவாதம் குறித்து பிரசாரம் செய்யாவிட்டாலும், முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரான ஓட்டுக்களை எங்களுக்குக் கொடுங்கள் என்பதை தமது வேட்பாளர்கள் மூலம் மறைமுகமாக வாக்களர்களுக்குச்சொன்னது. முஸ்லீம் ஓட்டுக்கள் கூட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி என இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாக பிரிந்தன. இவை எல்லாமும்தான் அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மதவாதத்தில் இருந்து ஜாதி அரசியலுக்கு பி.ஜே.பி நகர்ந்திருக்கிறது.
-கே. பாலசுப்பிரமணி
நன்றி : Vikatan

Leave a Reply

You must be logged in to post a comment.