வேலூர்,
வேலூர் மாவட்டத்தில்  சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சமையல் பொருள்கள், பணியாளர்கள் பற்றாக்குறையாலும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாக கூறப்படுகிறது.
வீணாகும் கேஸ் அடுப்புகள்:
பள்ளி சத்துணவு மைய பணியாளர்களின் நலனைக் கருதி, விறகு அடுப்பு பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக கேஸ் அடுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஆனால், கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும் அதற்கு சிலிண்டர் வழங்கவில்லை. இதனால் கேஸ் அடுப்புகள் பயன்படுத்தப்படாமல்  அப்படியே காட்சிப் பொருளாக கிடக்கிறது. மேலும் பல பழுதடைந்துவிட்டன.
சில சத்துணவு மைய பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தினர். ஆனால், தரமில்லாத கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டதால் குறுகிய காலத்திலேயே பழுதடைந்துவிட்டன. இதனால், பழைய முறைப்படி தேங்காய் மட்டை, விறகு அடுப்பில் தான் சத்துணவு சமைக்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் விரைவில் வந்துவிடும் எனத் தெரிவித்தாலும்,  தற்போது வரை சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதனால், கேஸ் அடுப்புகள் வாங்கப்பட்டு, அவை பயன்படுத்தாமலேயே வீணாகி வருகின்றன.
காலி பணியிடம்:
வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 45 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரே அங்கன்வாடி பணியாளரே கூடுதலாக 2 அல்லது 3 மையங்களை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக இது மாறியுள்ளது.
பற்றாக்குறை:
கடந்த 3 மாதங்களாக பள்ளி சத்துணவு மையங்கள், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்களுக்கு பருப்பு, எண்ணெய் சரிவர வழங்கப்படவில்லை. 30 விழுக்காடு பொருள்கள் மட்டுமே மையங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சத்துணவை சரியாக தயாரிக்க முடியவில்லை.
இருப்பு வைத்திருக்கும் மற்ற மையங்களிடமிருந்து பற்றாக்குறையாக உள்ள மையங்கள் கடனாக சமையல் பொருள்களைப் பெற்றுப் பயன்படுத்தி வருவதாக மையங்களின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.தேவையான சமையல் பொருள்கள் வழங்காமல் எவ்வாறு சத்தாண உணவை சமைப்பது எனப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட இல்லாமல் எவ்வாறு சமைப்பது என ஆதங்கப்படுகின்றனர்.
மானியம்:
சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியுதவி போதுமானதாக இல்லை. தற்போது மாணவர்களுக்கு பலவகை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. முட்டைக்கு மிளகு தூள் தடவித் தர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிளகின் விலை அதிகமாக உள்ளது. அதை வாங்கிப் பயன்படுத்துவது மிகவும் சிரமமாகும். விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியுதவி உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே, மானிய நிதியுதவியை உயர்த்தித் தர வேண்டுமென பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேள்விக்குறி:
பணியாளர் பற்றாக்குறை, கேஸ் சிலிண்டர் வழங்காதது, சமையல் பொருள்கள் பற்றாக்குறை, குறைந்த மானிய நிதியுதவி ஆகிய காரணங்களால் பள்ளி மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் இப்பிரச்னை நிலவுவதாகவும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களால் சரிவர பணி செய்ய முடியவில்லை என்றும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் நிலவும் மேற்கண்ட பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.