சென்னை:
தமிழகத்தில் மிகவும் பழமையான ஆலைகளில் ஒன்றான கெம்பிளாஸ்ட் அடுத்தமாதம் பொன்விழாவைக் கொண்டாட உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் அப்போதைய முதல்வர் அண்ணாதுரையால் இந்த ஆலை திறக்கப்பட்டது.
இந்நிறுவனத்தில் ஆண்டுக்கு 6,000 டன் பிவிசி பிசின் உற்பத்தி செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களின் திருப்தி, புதிய உத்திகளைக் கையாளுவது, ஊழியர்களின் கடும் உழைப்பு காரணமாக தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் டன் பிவிசி பிசின் உற்பத்தி செய்து நாட்டிலேயே 2 ஆவது பெரிய நிறுவனம் என்ற நிலையை எட்டியிருப்பதாக நிறுவனத்தின் கெம்பிளாஸ்ட் நிறுவனத் தலைவர் சங்கர் கூறியுள்ளார்.
நமது நாட்டில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் பிவிசி பிசின் தேவைப்படும் நிலையில் அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து 15 லட்சம் டன் அளவுக்கே பிவிசி பிசின் உற்பத்தி செய்து வருகின்றன. உள்நாட்டிலேயே தேவை அதிகமிருப்பதால் பிவிசி பிசினை நாங்கள் ஏற்றுமதி செய்வதில்லை. கட்டுமானம், நீர்ப்பாசனத் துறையில் அதிகரித்து வரும் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரித்து வருகிறோம் என்று துணைத்தலைவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.
பொன்விழாவை முன்னிட்டு மேட்டூரில் உள்ள ஆலையில் ரூ.100 கோடி முதலீட்டில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு திட்டமும், காரைக்காலில் உள்ள ஆலையில் ரூ.325 கோடி முதலீட்டில் குளோரினேட் செய்யப்பட்ட பிவிசி உற்பத்தி திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. காரைக்கால், கடலூர், மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளின் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.600 கோடி உள்பட, மேலும் சில திட்டங்களை செயல்படுத்த மொத்தம் ரூ. 1,050 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு என்ற வகையில் கடலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரை எடுக்காமல் கடல்நீரை சுத்திகரித்து ஆலைக்கு பயன்படுத்துவதாகவும் இதனால் உள்ளூர் மக்களுடன் சுமூகமான உறவை பராமரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.