திருநெல்வேலி, மார்ச் 6-
நான்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றை, கோகோ கோலா – பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு திறந்து விடு
வதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு,கோக்- பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது; கங்கைகொண்டானில் இந்த குளிர்பான ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து, அவற்றை நெல்லை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என முழக் கங்களை எழுப்பினர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘கோகோ கோலா’ நிறுவனம், தனது குளிர்பான கம்பெனியை துவங்கியது. துவக்கத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்ற ‘கோலா’ நிறுவனம், தற்போது 10 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகிறது. இதற்காக கோலா நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் தொகை வெறும் 37.50 காசுகள் (ஆயிரம் லிட்டருக்கு) மட்டுமே ஆகும்.

இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, பெப்சி குளிர்பான நிறுவனமும் தினமும் 15 லட்சம் லிட்டர் தண் ணீரை தாமிரபரணியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது. மேலும், பெப்சி நிறுவனத்திற்கு, கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் 36 ஏக் கரை, ஆண்டுக்கு வெறும் 36 ரூபாய்க்கு குத்தகைகொடுத்தது. சந்தை மதிப்பில் இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 15 கோடி ரூபாய் ஆகும். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வந்தனர். சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர். கோக்- பெப்சி நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளையால், தாமிரபரணி ஆற்று நீரையே விவசாயத்திற்கு நம்பியிருக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும், தாமிரபரணி மூலம் குடிநீர் ஆதாரத்தைப் பெற்று வந்த நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பொதுமக்களும், பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக அவர்கள் தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, கோக்- பெப்சி ஆலைகள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கோக்- பெப்சி ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுவதற்கு கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பு விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மார்ச் 2-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வானது, அந்த இடைக்காலத் தடையை ரத்து செய்தது. தாமிரபரணியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரையே கோக்- பெப்சி நிறுவனங்கள் எடுப்பதாகவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறினர்.

இதனால் மிகுந்த ஏமாற்றமும் ஆவேசமும் அடைந்த விவசாயிகளும், பொது மக்களும் கடந்த நான்கு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோக்- பெப்சி நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கோக்- பெப்சியின் தண்ணீர் கொள்ளைக்கு எதிராக ஆரம்பம் முதலே தொடர்ந்து களத்தில் போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திங்களன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீடு நடத்தியது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு இயக்கத்தில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க அகில இந்தியத் தலைவர் எஸ். திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி ஆகியோர் பங்கேற்று பெப்சி – கோக் கம்பெனிகளுக்கு தாமிரபரணி தண்ணீரை வழங்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். “தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 34 லட்சம் லிட்டர் தண்ணீரை, கோக் -பெப்சி நிறுவனங்களுக்கு ‘1000 லிட்டர் தண்ணீர் 37.50 காசுகள்’ என்ற விலையில் கொடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது; இது படிப்படியாக ஒரு கோடி லிட்டர் என அதிகரிக்கும் நிலையும் உள்ளது; கோக் – பெப்சிக்கு தண்ணீர் வழங்கினால் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கும்; அதே போல் 86 ஆயிரம் பரப்பளவில் தாமிரபரணியை ஆதாரமாக கொண்டவிவசாயமும் கடுமையாக பாதிக்கும்.வரலாறு காணாத வறட்சியை நெல்லைமாவட்டம் சந்தித்து வரும் நிலையில், குடிநீருக்கு மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்; இந்த சூழலில் தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்குவது மக்களின் வாழ்வுரிமை மீது தொடுக்கப்படும் தாக்குதலே ஆகும்.

எனவே, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கோக் – பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; நெல்லை மாவட்டத்தில் கோக் – பெப்சி நிறுவனங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. மல்லிகா, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. ஜெயராஜ், பி. தியாகராஜன், கணபதி, வேலுமயில், எஸ். சைலஜா, ஸ்ரீராம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ராஜாங்கம், ஆறுமுகம், வரகுணன், வேல்முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பூ.கோபாலன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகுரு, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் திருமலை நம்பி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரி, மாவட்டச் செயலாளர் தங்கம், வாலிபர் சங்க நிர்வாகி மேனகா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாலுசாமி, நிர்வாகிகள் ரயில்வே முத்துசாமி, முருகேசன் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மாணிக்கம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி உஸ்மான் உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், நிர்வாகி ஜமால் மற்றும் கட்சியினர் மாட்டு வண்டியில் வந்து கோக் – பெப்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

Leave A Reply