சென்னை, மார்ச் 5-
சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையமும், தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பும் இணைந்து பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இலவச மருத்துவ பரிசோதனையும் ஞாயிறன்று (மார்ச் 5) நடத்தின.

 

மார்ச் 8ல் மனிதச் சங்கிலி
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை,பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறைக்கு எதிராக, வடபழனியில் ஆகாஷ் மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், பல்வேறு மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக மார்ச் 12ம் தேதி வடசென்னையில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் நடைபெறுகிறது

 

நிகழ்ச்சியை துவக்கிவைத்து மருத்துவர் டி.காமராஜ், “வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழப் பணம் வேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பணத்தை வைத்துமகிழ்ச்சியோடு வாழ ஆரோக்கியம் தேவை. ஆனால், பலரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். இந்நிலையை மாற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்” என்றார்.மருத்துவர் ஜெயராணி,“புற்று நோயின் ஆரம்ப நிலை விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முகாம்களை நடத்த உள்ளோம். அதேபோல் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை குறித்தும் இலவச பரிசோதனை நடத்தி 2 மாதங்களுக்கு மாத்திரை கள் வழங்குகிறோம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம். படித்த பெண்களிடம் கூட புற்று நோய், ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு இல்லை.

இந்தியாவில் இதுகுறித்த போதியவிழிப்புணர்வு இல்லை” என்று தெரிவித்தார். தென்னிந்திய மகப்பேறுமருத்துவர்கள் கூட்டமைப்பு தலைவர் மருத்துவர் சி.வேணி, “35 வயதை தாண்டிய பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை (பாப்ஸ்மியர் பரிசோதனை) செய்து கொள்ள வேண்டும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடைய முடியும்” என்றார். இம்முகாமில் தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு இணை பொருளாளர் எஸ்.சம்பத்குமாரி, செயற்குழு உறுப்பினர் பி.பி.பிரேமலதா ஆகியோரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.