மதுரை/தேனி, மார்ச் 5-
ஜல்லிக்கட்டுக்கு அணி திரண்டு போராடியது போல் ஊழலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என மாணவர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஒன்பது மண்டலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை சந்தித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வியாழனன்று புறப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு சனிக்கிழமை தேனி மாவட்டத்திலும், ஞாயிறன்று மதுரை மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்தது.

ஆண்டிபட்டி மற்றும் கருமாத்தூர், செக்கானூரணி, திருமங்கலம் பகுதிகளில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:- மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் கொள்ளை யில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற உத்தர வுப்படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். ஆனால் அந்த அறிக்கை சட்டமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ வைக்கப்பட வில்லை.

ஊழல் செய்து சுருட்டப்பட்ட தொகை அரசுக்கு வந்திருந்தால் ஆயிரமாயிரம் அரசுப்பள்ளிகளை, கல்லூரிகளை துவக்கியிருக்க முடியும். அரசு மருத்துவமனைகளை புதிதாக உருவாக்கியிருக்க முடியும். நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கியிருக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. மதுரை மாவட்டம் உட்பட மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 100 நாள் வேலை கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை. அப்படி வேலை வழங்கினாலும் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. குடிநீரைக் கூட விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. வைகை அணையை தூர்வாரி அங்கு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மதுரை மாவட்டம் செல்லம் பட்டி ஒன்றியத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், தனியார் தண்ணீர் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுவருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியா ?
பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவோம் என்கிறா ர்கள். சொத்தும் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருமே குற்றவாளிகள் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது . அப்படி இருக்கும்போது ஊழல்வாதிகளின் அரசு தமிழ கத்தில் இருந்தால் நாடு எப்படி முன்னேற்ற பாதையில் செல்லும்?  ஆனால் தமிழகத்தில் கட்சியை, ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற அதிகாரப் போட்டி மட்டுமே அதிமுகவில் நடந்து வருகிறது .கர்நாடக சிறையில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியையும் ,கட்சியையும் இயக்கி வருகிறார் சசிகலா. அதற்காக தான் சிறை செல்லும் முன்னே அதிமுகவிற்கு துணைபொதுச்செயலாளராக தனது அக்காள் மகன் தினகரனை நியமி த்துள்ளார் சசிகலா .மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை கைப்பற்றவே இந்த போட்டி . இந்நிலையில் திமுக குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. வாக்கெடுப்பு நடந்த நாளில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர். சேர், மேஜைகள், மைக் உடைக்கப்படுகிறது. இதை வீரமணி உள்ளிட்ட அனைவரும் கண்டித்துள்ளனர்.

முக.ஸ்டாலினுக்கு ஏன் அவசரம்?
கடந்த 1991-96 ஆம் ஆண்டு களில் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட பல அமைச்சர்கள் தண்டனை பெற்றனர்.அப்போது அமைச்ச ராக இருந்த இந்திரகுமாரி ,செல்வ கணபதி உள்ளிட்டோரை தான் திமுக இணைத்துக் கொண்டது . மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் டிவி அலுவலகத்திற்கு பிஎஸ்என்எல் அதிகாரியை மிரட்டி 400 இணைப்புகளை போட வைத்தார்.உலகமே வியந்த 2ஜி அலைக்கற்றை ஊழலை செய்தவர் திமுகவை சேர்ந்த ஆ.ராசா .இன்னும் வழக்கு நடந்து வருகிறது .இப்படி திமுகவும், அதிமுகவும் ஊழலில் சிக்கி தவித்து வருகிறார்கள் .

இவர்கள் ஆட்சி காலத்தில் தான் கிரானைட் ,தாது மணல் கொள்ளை அதிகரித்தது. எனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அணிதிரண்ட மாணவர்கள் ஊழலுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்றார். ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.தயாளன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ராமன் ,வி.சின்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பால பாரதி ,ஆர்.அண்ணாத்துரை ,எஸ்.கண்ணன் ,மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். கருமாத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், உசிலம்பட்டி பகுதி மக்களின் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். உசிலம்பட்டியில் பெண்கள் கலைக்கல்லூரி திறக்க வேண்டும். பூக்கள் விளைச்சல் அதிகமுள்ள இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.