கடந்த ஆறு மாத காலத்தில் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி பற்றிய பொதுக் கருத்தாக ஏழை மக்களின் வாழ்வு இப்படிப் பொது வெளியில் விவாதிக்கப்படுவது சரியல்ல, அந்த தொலைக்காட்சியின் வருவாய் அதிகரிப்பதற்குத்தான் இந்நிகழ்ச்சி பயன்படும் என்ற விமர்சனம் இருக்கிறது.வெளிச் சமூகத்திற்கு வர வழியில்லாத, தன் குடும்பத்தில் தனக்கு மட்டுமே பிரச்னை என நினைத்துக் கொண்டிருக்கும் பல பெண்களுக்கு ‘அது உண்மையில்லை! தமிழகம் முழுவதும்‘ வீட்டுக்கு வீடு வாசல்படி’ என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் முறையிலும், அதைத் தாண்டிய வகையில் தங்களுக்குள் பேசிக் கொள்ள வாய்ப்பளித்து பொது சிந்தனை உருவாக்கும் விசயமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கிறது என எனக்குத் தோன்றியது. அதே நேரம் இது மட்டுமே இதன் சாதனையா என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் நான் பணி செய்த காலத்தில் ‘கனவல்ல நிஜம்’ போன்ற நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்பட்டிருந்தாலும் அவை இந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி மக்களை பரவலாக சென்றடைந்து வருவதைக் காண்கிறேன்.குடும்பப் பிரச்னைகளில் மிகப் பொதுவான அம்சமாக ஆண்களின் குடிப் பழக்கம் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் தான் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தாலும் பெண்டாட்டி அதை சகித்துக் கொண்டு தன்னுடன் வாழ்ந்தே தீர வேண்டும் என்பதே பொதுவான ஆண் புத்தியாக வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது.மிகச் சமீபத்தில் ஒரு கணவன் கூலி வாங்கி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விட்டான். இந்நிலையிலும் வருடக் கணக்கில் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வந்தவர் மனைவி. தாய் அறிய அவர் குடும்பத்திற்கு சகோதர முறையில் உதவி வந்த நண்பருடன் அந்தப் பெண் போனில் பேச நினைத்ததைக் கூட அவனால் தாங்க முடியவில்லை. “அடிப்பேன் உதைப்பேன் இங்கு கொண்டு வந்து விட்டுப் போய்விடுவேன்” என்று அவ்வளவு வன்மத்துடன் தன் நிலையை அங்கு அழுத்தமாக பதிகிறான் கணவன். அனுசரித்துப் போக அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்படுகிறாள் மனைவி.இது போன்று ஆணாதிக்க மனநிலையை களையவோ, அதற்கான சமூக அமைப்பின் அடிப்படை பற்றிய புரிதல் ஏற்படவோ, அதை பாதுகாத்து வருவது போன்ற காவல்துறை நடவடிக்கை பற்றிய விமர்சனங்களுக்கோ வாய்ப்பின்றி , அது ஒரு குற்றம் என்பதே மனதில் பதியாத கணவனை நம்பி அவனுடன் அந்தப் பெண் மீண்டும் தன் அடிமைத்தன சூழல் மாறாமல் குடும்பத்திற்கு திரும்ப செல்வதையும் பார்க்கிறோம்.மாதர் அமைப்புகளுக்கு பெண்கள் சென்று விழிப்புணர்வு பெறுவதையும், ஒன்றுபட்டு போராடும் உணர்வடைவதையும் திட்டமிட்டு தடுக்கும் நடவடிக்கையாகவும் இந்நிகழ்ச்சி அமைகிறது என்ற எண்ணம் ஏற்படுவதையும் தடுக்க இயலவில்லை. முகநூல் பக்கத்தில் சமீபத்திய பதிவொன்றில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது சில முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் பதிந்திருப்பதாகப் படித்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு பெண் முத்தலாக் முறையை ஒழித்து விடுங்கள் என கதறியதே அதற்கு காரணமாக கூறப்பட்டது.அந்நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். கோவையை சேர்ந்த ஸ்வப்னா எனும் இஸ்லாமிய சகோதரி அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர்தான். ஆனாலும் வாழ்வில் அவர் பட்ட துன்பங்களே அவர் அப்படி வேண்டுகோள் விடுப்பதற்குக் காரணமாக அமைந்தது.வரதட்சணை கொடுமை , மாமனார் தவறாக நடக்க முயன்று அதற்கு சம்மதித்தால் அங்கு வாழலாம் எனும
் நிர்ப்பந்தம், அதை ஏற்காத நிலையில் மாமனாரிடம் அடிஉதை போன்ற பல கொடுமைகளை சந்தித்தும் அவர் தன் கணவரைப் பற்றி கூறும் ஒவ்வொரு பொழுதிலும் அவர் கண்களில் சிரிப்பு.
அது கணவர் மேல் அவர் கொண்ட அழகிய காதலை பறைசாற்றியது. ஆனால் வாழ முடியாத சூழலில் ஜமாத்தார் பஞ்சாயத்தில் பிரிவதும் சேர்வதுமான வாழ்வில் தாங்க இயலாத மற்றொரு கொடுமை சேர்ந்தது.தாய்மையடைந்த அவரை எந்த விதத்திலும் கவனிக்கத் தயாராயில்லாத கணவர் குழந்தை பிறந்த பின் அவரை பாலியல் ரீதியாக படுத்திய பாடு… அதையெல்லாம் அந்தப் பெண் வெட்கம் விட்டு சொன்னபோது பார்த்த எவராலும் தாங்கியிருக்க இயலாது. பாலியல் உறவு அந்தப் பெண்ணிற்கு உயிராபத்து விளைவிக்கும் என மருத்துவர் எச்சரித்த நிலையிலும் விடாமல் அணுகி நெருக்கடி தந்ததும், அதை விடவும் அதை குழந்தை பார்த்தால் பரவாயில்லை எனும் நிலை எடுத்து கணவன் அவளை அணுகியதும், பாலியல் உறவைக் கூட போன் கேமராவில் பதிவு செய்வாரோ எனும் அச்சம் ஏற்படும் அளவு அவர் தனது ஒவ்வொரு செயலையும் போனில் ரெகார்ட் செய்ததும் அந்தப் பெண்ணின் நியாயமான மனக்குமுறலாக நம்மை பதறச் செய்தது.இந்நிலையில் தான் அவர் முத்தலாக் பற்றிய அவரின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அதனுடன் நான்கு திருமணம் வரை செய்ய உள்ள அனுமதி காரணமாக அடுத்த பெண்ணின் வாழ்வு பாதிக்குமே எனும் அச்சத்திலிருந்து எழுந்த கதறலாகவும் அது இருந்தது.நான் பார்த்தவரை சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டிய பல அம்சங்கள் அவரின் பிரச்னையில் இருக்கிறது. நியாயம் தேடும் ஜமாத் அமைப்பாக இருந்தால் அவரின் கோரிக்கையை பரிசீலிப்பதுடன் அவர் கணவர் குடும்பத்தார் மீது சட்டப்படி வழக்கு தொடுத்து கைது நடவடிக்கை எடுக்க வைக்கவும் காவல்துறையை அணுகி முயற்சி செய்ய வேண்டும்.இஸ்லாமிய சட்டப்படி ஒரு ஆண் நான்கு திருமணம் செய்ய அனுமதியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு அந்த நபர் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியாத வகையில் காவல்துறை நடவடிக்கைக்கு ஜமாத்தார் வழிகாட்டியிருந்தால் உன்னதமாக இருந்திருக்கும். அதற்கு வழியில்லாமல் போகிறபோதுதான், ஜமாத் நடக்கும் போது பெண்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் நியாயம் பெற்று மற்ற பெண்களாவது பாதிக்கப்படாமலிருக்கும் விதத்தில் செயல்படலாமே என்பதுதான், அந்தப் பெண் இது போன்ற டிவி நிகழ்ச்சிகளை நம்பி செல்வதற்கும் மாதர் சங்கத்தை அணுகுவதற்குமான அடிப்படை.பெண் மீதான வன்முறை களைய இந்த மகளிர் தினத்தில் குரலெழுப்புவொம்! இப்படிப்பட்ட உருக்க நிகழ்ச்சிகள் தேவையா இல்லையா என்ற கேள்வி தங்களை நோக்கி வருவதைத் தடுக்க வேண்டுமானால், இத்தகைய ஊடக வெளிப்பாடுகள், வெறும் சமரசங்களாக முடியாமல், பெண்ணுக்கான நியாயத்திற்காக, ஆணாதிக்க எதிர்ப்புச் சிந்தனைகள் வலுப்பெறுவதற்காகத் தோள்கொடுக்கட்டும்.
ஆர். செம்மலர்

Leave a Reply

You must be logged in to post a comment.