“உலகிலேயே சுமூகமாக நடைமுறைப்படுத் தப்பட்ட DEMONETIZATION” என மத்திய அரசின் செல்லாக் காசு நடவடிக்கை குறித்து, சமீபத்தில் தனது புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
பருவம் பொய்த்தாலும், பொய்க்காத நம்பிக்கையோடு காத்துக் கிடந்து, விரக்தியின் விளிம்பில் செத்து மடிந்த விவசாயிகளின் சாம்பலையும்… நலிந்து போன சிறு,குறு தொழில்களால் துரத்தியடிக்கப்பட்டு, வெறுங்கையோடு முடங்கிக் கிடக்கும் தொழிலாளிகளின் விசும்பல்களையும்… தனது வாழ்நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்ட இன்னல்களை இன்னமும் சுமந்து கொண்டுள்ள சாமானியர்களின் பரிதவிப்புகளையும்…… தங்களது காலடியில் புதைத்துக் கொண்டு, மார்தட்டிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் வஞ்சகம் கண்டு, குமுறிக் கொண்டுள்ளனர் மக்கள்.
ஒட்டுமொத்த தேசத்தையும் தனது ஒற்றை அறிவிப்பால் நடுத்தெருவில் நிறுத்திய, பாஜக அரசின் செல்லாக் காசு நடவடிக்கை குறித்த ஒரு விழிப்புணர்வு பிரசுரம் “வதைபடும் மக்கள்… தொடரும் துயரங்கள்…”. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இச்சிறு நூல், கேள்வி-பதில் நடையில் அமைந்துள்ள ஒரு எளிய கையேடு.
தனது மாணாக்கர்களின் கரம் பற்றி, உடன் நடக்கும் பொறுப்பான ஆசிரியரைப் போல், விரிகிறது நூலாசிரியரின் எளிய எழுத்து நடை. இந்தியப் பொருளாதாரத்தின் நுணுக்கங்களையும், ஆட்சியாளர்களின் ஏமாற்று வஞ்சகங்களையும், அவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் சூழ்ச்சிகளையும் சிக்கலின்றி புரிய வைக்கும் பாங்கு கூடுதல் சிறப்பு.
தனது 56 இன்ச் (அங்குல) மார்பை மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து விட்ட, தாராளவாதி மோடியின் நெஞ்சாங்கூட்டில், சாமானியர்களுக்கான இடம் ஊசிமுனையளவு கூட இல்லை என்பதை அப்பட்டமாய் நிரூபிக்கிறது இந்நூல். கருப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்ச ஒழிப்பு, தீவிரவாதம், எல்லையில் ராணுவ வீரர்கள், பணமில்லா பரிவர்த்தனை என எத்தனை ஒட்டுக்கள் போட்டாலும், மறைக்க இயலாமல் கிழிந்து தொங்கும் பாஜகவின் கோரமான முகத்திரையை மேலும் நார் நாராகக் கிழித்தெறிகிறது.
“தனியார் மயம், திகைப்பைத் தரும் குறுக்கு வழியாகும். ஆனால் அதன் விளைவு ஒரு பிரச்சனையிலிருந்து வேறொரு மோசமான பிரச்சனைக்கு இட்டுச் செல்லும்” என நிச்சயமற்ற பெருமை நூலில் இடம் பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியா சென்னின் கூற்று, செல்லாக்காசு பிரச்சனையில் நூறு சதம் பொருந்திப் போவதை ஆணித்தரமாக விவரிக்கிறார் தோழர்.சி.பி.கிருஷ்ணன்.
அநீதிக்கெதிரான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதற்கான முதற்படி, அவற்றை உயிர்ப்புள்ள சமூகப் பிரச்சனைகளாக மாற்றுவதும், சாமானிய மக்களை இணைத்துச் செல்வதும் தான். அவ்விதத்தில், பாஜக அரசின் மக்கள் விரோத செல்லாக் காசு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியப்படி இச்சிறு நூல் என்று நிச்சயமாக குறிப்பிடலாம்.
-எஸ். பிரேமலதா
வதைபடும் மக்கள் தொடரும் துயரம்
ஆசிரியர் சி.பி.கிருஷ்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
எண், 7 இளங்கோ சாலை.
தேனாம்பேட்டை
சென்னை – 600018
பக்: 32 விலை ரூ. 20/-

Leave a Reply

You must be logged in to post a comment.