மக்கள் சீனம் மகத்தான வரலாற்றுக்குச் சொந்தம் கொண்ட பூமி. தொன்மையான பண்பாட்டு அடையாளங்களும் அதற்கு உண்டு. இந்தியாவின் வரலாற்றை எழுதுவோர் கூட சீனாவின் யுவான் சுவாங்கை எடுத்தாள மறப்பதில்லை. வரலாற்றுப் பதிவுகளின் மீது
அவ்வளவு அக்கறை கொண்டவர்கள் சீனதேசத்தவர்.
பட்டு, காகிதம், கண்ணாடி, வெடிமருந்து, அச்சுக்கலை, பீங்கான், அக்குபஞ்சர் மருத்துவம் போன்றவற்றை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்; உலக அதிசயங்களில் ஒன்றான 2560 கி.மீ நீளங்கொண்ட பெருஞ்சுவர் எழுப்பி வரலாறு படைத்தவர்கள். குங்ஃபூ என்ற தற்காப்புக் கலைக்கு சொந்தக்காரர்கள்.
சீனாவின் துயரம் மஞ்சள் நதி என்றாலும் அந்த நதிக்கரையோரம் எதிர் நீச்சல்போட்டு பெருந்தேசத்தைக் கட்டி நிர்மாணித்தவர்கள்.
இப்படிப்பட்ட நாட்டின் வரலாற்றை பல ஆயிரம் பக்கங்களில் எழுதினாலும் அடங்காமல் திமிறி நிற்கும். ஆனால் செறிவான எழுத்துக்களால் சீறும் காளையைத் திமில் பிடித்து அடக்கி வெற்றி
காணும் வீரரைப் போல் சீனவரலாற்றை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் சேது ஆனந்தன்.
சீனர்களுக்கு அடிமை உணர்வை ஏற்படுத்த ஆண்களுக்கு ஒற்றைப் பின்னல் சடையை அறிமுகம் செய்த ஷூன் சி காலம் (1644) தொடங்கி தற்காலம் வரையிலான சீன வரலாற்றினை 135 பக்கங்களில் எழுதிக்காட்ட இயலுமா? இயலும் என்ற சவாலோடு கையில் எழுதுகோல் எடுத்து சாதித்தும் இருக்கிறார் அவர் .
முதல் 20 பக்கங்களில் முற்காலச் சீனாவின் வரலாற்றை முடித்துக் கொண்டு “ இளம் மாவோ” என்பதிலிருந்து இக்கால வரலாற்றைத் தொடங்குகிறார். அதில் மாவோ பிறந்த ஆண்டினைக் குறிப்பிட்டிருக்கலாம். ஒரு வரலாற்று நூலில் அந்தப் புள்ளி மிக முக்கியமானது. ஆனால் விடுபட்டுள்ளது.
1917 சோவியத் புரட்சிக்குப்பின் மாணவர் இயக்கத்தின் வழி தன்னை வளர்த்துக் கொண்டு சேர்மன் மாவோ என சீனத்தின் தன்னிகரில்லாத் தலைவராக மாறிய வரலாறு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றோடு பின்னிப் பிணைத்து எழுதப்பட்டுள்ளது.
இடையே சன்யாட்சென், சியாங்கே ஷேக் இவர்களுக்கு எதிரான போராட்டங்கள், உலக அரசியல் வரலாற்றில் இரண்டாவது சோஷலிசப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நெடும் பயணம்; தோழர்கள் மாவோ, சூயென்லாய், சூடே ஆகியோரின் மனைவியர் செய்த தியாகங்கள், இரண்டாம் உலகப் போர், ஏகாதிபத்திய ஜப்பானின் சீன ஆக்ரமிப்பு முயற்சி, எதிரியான சியாங்கே ஷேக்குடன் இணைந்து தேசம்காக்க மாவோவும் கம்யூனிஸ்ட்களும் நடத்திய போராட்டம், தியாகத் தழும்பேறிய செஞ்சேனை வீரர்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளிக்கச் சென்ற கனடா நாட்டின் டாக்டர் நார்மன் பெத்யூன், இந்தியாவின் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ், 1946ல் ஜப்பான் வீழ்ச்சிக்குப் பிந்தைய உள்நாட்டுப் போர், 1949ல் மக்கள் சீனக் குடியரசு மலர்ந்தது என்ற சீனாவின் வரலாற்றுக் காட்சிகளை மனத்திரையில் பதியவைக்கின்றன எழுத்துக்கள்.
நூலின் பிற்பகுதி மாவோவின் தனிப்பட்ட குணாம்சங்கள், தலைவர்களுடனான சந்திப்பு, மனைவியானாலும் மகனானாலும் தியாகத்திற்கு உறவில்லை என்ற உள்ளஉறுதி, சோஷலிச சித்தாந்தத்தை வறட்டுத்தனமாக செயல்படுத்த முனைந்த தடுமாற்றம், சிக்கல் உருவானபோது ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கட்சிப் பொறுப்பை கவனிக்கச் சென்ற பாங்கு என பலவற்றையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது நூல்.
மூன்றாவது பகுதிசோஷலிச சந்தைப் பொருளாதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு
இப்போதுள்ள சீனாவின் நிலை விளக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனைச் சிதறடிக்க அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகள் மேற்கொண்ட பனிப் போரிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது சீனா. காற்று வருவதற்காக சன்னல்களைத் திறக்கலாம்; விஷப்பூச்சிகள் வந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்ற டெங்ஜியோபிங்கின் எச்சரிக்கை சோஷலிசக் கொள்கையையும் சந்தைப் பொருளாதாரத்தையும் காலத்துக்கேற்ப இணைத்து முன்னேறியதையும் முன்னேறிக் கொண்டிருப்பதையும் சேது ஆனந்தன் எளிய நடையில் புரியும் முறையில் பதிவு செய்திருக்கிறார். மக்கள் சீனக்குடியரசுக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்குத் தூண்டி விடப்பட்ட தியானன்மென் சதுக்க மாணவர் போராட்டத்தையும் மறக்காமல் சொல்லியிருக்கிறார்.
நானூறு ஆண்டுகால சீன வரலாற்றினை சொற்சிக்கனத்தோடு மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருப்பதற்குப் பெரிதும் பக்க துணையாக விளங்குபவை பொருத்தமான படங்கள், வழுவழுப்பான தாள்களில் வண்ணங்களைக் குழைத்து எழுத்துக்களும் படங்களும் கண்களுக்கு இதமாக இருக்குமாறு செய்யப்பட்டுள்ள பா.ரவி அவர்களின் வடிவமைப்பு வரலாற்றைச் சுமையாக்காமல் சுவையாக்க உதவுகிறது.
நூலின் கடைசிப் பக்கத்தில் உள்ள படம் இங்கே கற்பனை செய்தும் பார்க்க முடியாதது. சேர்மன் மாவோ வினுடைய ஆளுயர சிலையின் தோளில் ஒரு சிறுமி அமர்ந்து பார்க்கிறாள். அந்தச் சிறுமியின் தாய் அருகே இருக்கிறார். இங்கே எந்தத் தலைவரின் சிலையிலாவது அப்படி அமர்ந்து குழந்தை மகிழ்ந்திட முடியுமா? சோஷலிச ஜனநாயகம் மக்களின் மகிழ்ச்சியோடு தொடர்புடையது என்பதற்கு இதுவும் சான்று போல் காட்சியளிக்கிறது. மொத்தத்தில் எளிய நூல்; வரலாற்றை சுவையாகக் கற்பதற்கு எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் நூல்.
-மயிலைபாலு
மக்கள் சீனம்
ஆசிரியர்: சேதுஆனந்தன்
வெளியீடு: 102, ராஜகுமாரன் காம்ப்ளக்ஸ்
மெயின்ரோடு, சின்னமனூர் – 625 515
தேனிமாவட்டம்
பக்:136 விலை ரூ.300/-

Leave a Reply

You must be logged in to post a comment.