மன்னார்குடி
ரேசனில் துவரம்பருப்பு, உளுந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவிந்திருந்தார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேசன் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்ட போது அமைச்சரே இப்படி பொய் சொல்வது அவமானம் என தெரிவித்தனர். மேலும் எரியும் நெருப்பில் பாமாயில் வார்ப்பது போல் அவரது பொறுப்பற்ற பேச்சு இருக்கிறது என ரேசன் கடை ஊழியர்களே தங்கள் குமுறல்களை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சென்னை மைய கிடங்கிலிருந்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது கிட்டங்கிகளுக்கு இந்த உணவுப்பொருட்கள் உளுந்து, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வரவில்லை. இந்நிலையில் மக்கள் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். ரேசனை மட்டுமே நம்பியிருக்கும் பல குடும்பங்கள் பல்வேறு வேலைகளுக்கிடையேயும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ரேசன் கடைக்கு வந்த பொருட்கள் வந்து விட்டதா என கேட்கும் நிலையே நீடிக்கிறது.  இந்தக் கேள்விகளுக்கு எந்த ஒரு உறுதியான பதிலையும் கூறமுடியாத நிலையில் ரேசன் கடை ஊழியர்களும் இருந்து வருகின்றன.   தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஆளும் அரசிற்கு எதிரான அதிருப்தியும் கோபமும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வியாழனன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மாநிலத்தின் அங்காடிகளில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி தொடர்ந்து கிடைக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது பாமாயில் துவரம்பருப்பு, உளுந்து ஆகியவை திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது கிட்டங்கிகளுக்கும் இதுவரை வரவில்லை எனவேதான் பொது விநியோகத்திற்கு அங்காடிகளுக்கு அனுப்பமுடியிவில்லை என்ற தகவல் கிடைத்து. இவைகள் எப்போது கிடைக்கும் என்ற தகவலும் கிடைக்கவில்லை.

Leave A Reply