புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு அனுமதியளித்துள்ள ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவில் உள்ள இளைஞர்கள் அறிவித்திருந்தனர்.  ஆனால் போராட்டக்குழு அதிகாரபூர்வமாக அதன் நிலை என்ன என்பது குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்தை தொடர்வதா, தற்காலிகமாக வாபஸ் பெறுவதா என்பது குறித்து நாளை அறிவிப்பதாக பேராவூரணியில் போராட்டக்குழு தலைவர் வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் பின்னர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், இந்த திட்டத்தால் எவ்வித பாதிப்பும் இருக்காது என்று மட்டும் தெரிவித்தது.
இதையடுத்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டக்குழு பிரதிநிதிகளை சென்னைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காது. ஆகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேச்சு வார்த்தையில் பங்கேற்ற போராட்டக்குழுவினர் ஊர் சென்று மக்களுடன் பேசிவிட்டு தகவல் அளிக்கிறோம் என நெடுவாசலுக்கு வந்தனர். பின்னர் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மத்திய மோடி அரசு போராட்டத்தை கைவிடுவோம் என அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டக்குழுவினர் மாலையில் அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு போராட்டக்குழுவின் அதிகாரபூர்வமான அறிவிப்பாக வெளிவரவில்லை.

இந்நிலையில் போராட்டக்குழுவின் தலைவர் வேலு செய்தியாளர்கள் பேசுகையில் நெடுவாசல் போராட்டத்தை தொடர்வதா அல்லது வாபஸ் பெறுவதா என்பது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: