சென்னை, மார்ச் 2 –
தாமிரபரணி ஆற்றில் இருந்து கோககோலா – பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த குளிர்பான ஆலைகள் முறைப்படியான அனுமதி பெற்றே தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதாலும், மேலும் உபரியாக செல்லும் தண்ணீரையே இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாலும் அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘கோகோ கோலா’ நிறுவனம், தனது குளிர்பான கம்பெனியை துவங்கியது. துவக்கத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்ற ‘கோலா’ நிறுவனம் தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகிறது. இதற்காக கோலா நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் தொகை ஆயிரம் லிட்டருக்கு வெறும் 37.50 காசுகள் மட்டுமே ஆகும்.
கோலா நிறுவனத்தின் இந்த தண்ணீர் கொள்ளையால், தாமிரபரணி ஆற்று நீரையே தங்களின் விவசாயத்திற்கு நம்பியிருக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும், தாமிரபரணி மூலம் குடிநீர் ஆதாரத்தைப் பெற்று வந்த நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பொதுமக்களும், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டது. கடைமடைப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது.
எனவே, கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால், அரசு நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குடிநீர் பாட்டில் தயாரிப்பதற்கான ஆலையை துவங்க பெப்சி நிறுவனத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் அந்த நிறுவனத்திற்கு, ரூ. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட 36 ஏக்கர் சிப்காட் நிலத்தை, ஆண்டு ஒன்றுக்கு வெறும் 36 ரூபாய்க்கு 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தது. அதாவது 36 ஏக்கர் நிலத்தை 98 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு, பெப்சி நிறுவனம் அரசுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 செலுத்தினால் போதும். இந்த அடிப்படையில் பெப்சி நிறுவனமும், கங்கை கொண்டானிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் நிலை உருவானது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி வந்த நிலையிலேயே, சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்த வழக்குகள், நீதிபதி எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “அப்போது, விவசாயிகள் ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு எப்படி தண்ணீர் வழங்க இயலும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த தடை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இத்தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். கோககோலா- பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றை உறிஞ்சுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்தான், தாமிரபரணி தொடர்பான வழக்கு, வியாழனன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் செல்வம், கலையரசன் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது.
அப்போது, “தாமிரபரணியில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம்; இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றுள்ளோம்; சிப்காட் வளாகத்தில் உள்ள பல்வேறு ஆலைகளும் தாமிரபரணி ஆற்று நீரையே பயன்படுத்துகின்றன; அப்படியிருக்க எங்கள் மீது மட்டும் வழக்கு தொடர்ந்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது” என்று கோக்- பெப்சி ஆலைகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டு, “தாமிரபரணியில் இருந்து முறையாக அனுமதி பெற்றே குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது; அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்நோக்கம் இருக்கிறது; எனவே, குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தீர்ப்பளித்து உள்ளனர்.
இது விவசாயிகளையும் பொதுமக்களையும் கவலை அடையச் செய்துள்ளது. தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, தாமிரபரணி ஆறு கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றிலிருந்து பண்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு தடை நீக்கப்பட்டதை அறிந்ததும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தாமிரபரணி ஆற்றை காப்பதற்கு தமிழக அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், தாமிரபரணியைக் காக்க மிகப்பெரும் போராட்டம் துவங்கப்படும் என்றும் அறிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தரவை மறுபரிசீலனை செய்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெப்சி நிறுவனத்திற்கு குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கிஉயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தாமிரபரணியில் இருந்து கோகோ கோலா நிறுவனத்துக்கு குடிநீர் மற்றும்
குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலைக் காக நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்
ணீர் எடுக்கவும், பெப்சி குளிர்பான தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்
டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதையும் சேர்த்து ஒரு நாளைக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். சாகுபடிக்கு தேவைப்
படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என தடை பெறப்பட்டது. இந்நிலையில்தான் இந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ
மழையும் பொய்த்துப்போனதால் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு
கிடக்கின்றன. எனவே, மாநில அரசு தமிழ் நாடு முழுவதையும் வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. தாமிரபரணி ஆறு ஏற்கெனவே வறண்டு கிடக்கிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் கிடையாது. கால்நடைகளுக்கு தண்ணீர் கிடையாது. குடிதண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை தான்
மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பன்னாட்டு கம்பெனியான பெப்சி நிறுவனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே இருந்த தடையை நீக்கிஅனுமதி அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சி யளிக்கிறது. ஏற்கெனவே வறண்டு கிடக்கிற
அந்த ஆற்றில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மேலும் அப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு ஆட்பட்டுள்ள நிலையிலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.
சமீபத்தில், சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தாமிரபரணி யில் தண்ணீர் எடுக்க விதித்திருந்த தடையை நீக்கியிருப்பது ஆச்சரியமளிக் கிறது. குடிதண்ணீருக்காகவும், விவசாயத்திற் காகவும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிற நேரத்தில் பன்னாட்டு நிறு வனங்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.