வாஷிங்டன், மார்ச் 2 –
அமெரிக்காவின் கன்சாஸ்சில் இந்திய பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரியானை வியாழனன்று வாஷிங்டன்னில் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து பால் ரியான் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த தருணத்தில் இரு நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே குச்சிபோட்லாவின் உடல், அவரது
சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதற்காக அமெரிக்காவிலிருந்து குச்சிபோட்லாவின் மனைவி சுனன்யாவும் ஹைதராபாத் வந்துள்ளார். கணவரை இழந்த துயரச் சம்பவம் குறித்து, தமது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள சுனன்யா, மீண்டும் தாம் அமெரிக்காவுக்கே செல்ல இருப்பதாகத் தெரி வித்துள்ளார். கணவர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார் என்ற அடிப்படையில், எச்4 ((H4)) என்ற விசாவில் அமெரிக்காவில் சுனன்யா தங்கி வேலைபார்த்து வந்தார். ஆனால் தற்போது கணவர் இறந்துவிட்ட நிலையில், சுனன்யாவுக்கு விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: