ஆழி சூழ் மலைகள், பச்சைப்பட்டு விரித்தார் போன்ற காடுகள், நெடுவயல்கள், வண்ணப்பறவைகள் என பூமி ஒரு பொக்கிஷம். பால்வெளியில் எண்ணிலடங்கா கோள்கள் உள்ளன. ஆனால் இந்த நிமிடம் வரை நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் எனச் சொல்லப்படும் பஞ்ச பூதங்களும் உள்ள ஜீவராசிகளின் ஒரே வாழ்விடம் பூமி மட்டும்தான்.

நாசா உள்ளிட்ட உலக விஞ்ஞானிகள் பூமியைப்போல ஒரு கோளைத் தேடும் ஆராய்ச்சியில் இன்றுவரை தோல்விதான். ஜீவராசிகளை உயிர்ப்பிக்கும் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டிய சக்திகள் எல்லாம் பூமியை அழித்து விட துடிப்பதை அனுமதிக்கலாமா?

நெடுவாசல், வாணக்கன்காடு, வடகாடு, முள்ளங்குறிச்சி, கருக்காகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கிறது. புதுக்கோட்டை வானம் பார்த்த பூமி நெடுவாசலை சுற்றி 20 கி.மீ. தூரம்வரை பல்வேறு விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்திலேயே மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, மல்லிகை, மா, பலா, வாழை, கடலை, நெற்பயிர் என அனைத்தும் விளைகிற பூமியாக வளம்நிறைந்துள்ள பகுதியாகும் நெடுவாசல். ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கவும், தனியார் கம்பெனியின் லாபவெறிக்கு தீனிபோடவும் இப்போது நெடுவாசல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அத்தனை விவசாயக்குடிகளின் தலையிலும் கொலை வாள் குறிபார்க்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஏற்கனவே புதுக்கோட்டையில் ஆண்ட அரசியல் கட்சியும், ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் மலைகளைக் கொள்ளையடித்து வருகின்றனர். ஆற்று மணலை தடையின்றி சூறையாடுகின்றனர். இயற்கைக் காடுகளை அழித்து பெரு முதலாளிகள், அரசியல்வாதிகளின் பேப்பர் மில்களுக்காக தைலமரங்காடுகளை உண்டாக்கி மாவட்டத்தையே பாலைவனமாக்கிவிட்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்பும்கூட லாபவெறி கொண்ட இவர்களின் பேராசைக்கு முடிவு கட்ட முடியவில்லை. மாவட்டமே பாலையாகி விடுமே எனத் தவிக்கும் தருணத்தில் பேரிடியாக ஹைட்ரோ கார்பன் என்கிற எரிவாயு திட்டம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்த அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் என்கிற வேதியியல் பெயருக்குள் ஒளிந்திருக்கும் மீத்தேன் திட்டம் பூமியை மலடாக்கி, மனிதனைக் குருடாக்கி, பால்கொடுத்த தாயின் மார்பை அறுக்கும் திட்டம். இத்திட்டத்தில் 6000 அடிக்கு மேல் ஆழ்துழையிட்டு பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். இது விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும். மக்கள் வாழ வழியற்றதாக இந்த பகுதி மாறிவிடும். இதனால் 21 லட்சம் ஏக்கர் நிலம் பாலையாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. நெடுவாசலைச் சுற்றி 100 கி.மீ சுற்றளவில் விவசாயம் அழிந்துவிடும் என அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன்குடியை தானே அழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையும், ஒத்து ஊதும் மாநில அரசின் மௌனமும் புதுக்கோட்டையை புரட்சிக்கோட்டையாக மாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.
எஸ்.கவிவர்மன்
சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.