கோவை,

நாளுக்கு நாள் வரும் பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடு பட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்கு பேர் இந்த நோய்தாக்கி இறந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் பொதுமக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில் கோவைமாவட்ட நிர்வாகம் இதனை தடுப்பதற்கான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் கூறுகையில், பன்றிக்கய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் அரசுமருத்துவமனையில் மட்டுமே உள்ளதாக அரசுதரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் வருபவர்களை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வதும், நோய் தீவிரம் அடையும் நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது. இதனால் உயிர் இழப்பு

ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் அனைத்து சுகாதார மையங்களுக்கும் தேவைக்கேற்ப மருந்துகளை அனுப்பவேண்டும். மேலும், இந்நோய்கள் வருமுன் காப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என மனு அளித்தனர்.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான வாலிபர் சங்க இளைஞர்கள் பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க வேண்டும் என்று முகமூடி அணிந்து மனுவோடு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: