தஞ்சாவூர், பிப். 26-
தஞ்சையில் கறுப்பும் சிவப்பும் சேர்ந்து நாடக விழாக்களைத் தொடர்ந்து
ஒவ்வோராண்டும் நடத்திடுவோம் என்றும், நீங்கள் எடுத்திடும்
நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும்
அனைத்துஉதவிகளையும் செய்திடுவோம் என்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தென்னிந்திய
மக்கள் நாடக விழாவின் நிறைவு நிகழ்வு சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.
அதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே எஸ்.எஸ். பழனிமாணிக்கம் இவ்வாறு
கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
“இந்த மாவட்ட இளைஞர்கள் பற்றி எனக்கு கவலை இருந்தது. அது களப்பிரனைச்
சந்தித்தபின்பு மறைந்துவிட்டது. தஞ்சை ப்ரகாஷ்,பின்னர் பாரதிப்பித்தன். அதன்பிறகு பெயர்சொல்லக்கூடிய அளவிற்கு இப்போது களப்பிரன் வந்துகொண்டிருக்கிறார். எனக்கு இப்போது நம்பிக்கை வந்துவிட்டது.
எங்கள் இயக்கத்தின் தலைவர் கலைஞர் அவர்களும், முரசொலி மாறன் அவர்களும் என்னிடம் எப்போதும் அரசியல்ரீதியாக கறுப்பும் சிவப்பும் இணைந்து செல்ல வேண்டும் என்றுதான் போதித்து வந்தார்கள். அப்படித்தான் நான் எங்கள்
இயக்கத்தால் வளர்க்கப்பட்டேன். திமுக மாணவர் அணி, இளைஞர் அணியில்
செயல்பட்ட காலத்தில் என்னை சோவியத் யூனியனில் நடந்த இளம் கம்யூனிஸ்ட்
இளைஞர்கள் மாநாட்டுக்கு சகோதரப்பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்கள்.
நான்கு நாட்களும் காலையிலிருந்து இரவு வரை எத்தனை நாடகங்கள்?
நம்பமுடியவில்லை. நிறைய இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
இதேபோன்று நீங்கள் ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன். உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
இதேபோல் அடுத்த ஆண்டும் உங்கள் அமைப்பு இங்கே வந்து கலை வளத்தை வழங்கிட வேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன். இவ்வாறு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறினார்.
கருப்பு கருணா
அடுத்து கருப்பு கருணா பேசுகையில், நடைபெற்ற நாடகங்கள் அனைத்தும்
அற்புதமாக உருவாகி இருந்ததைக் குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக, ஓராள்
நாடகங்களாக நடத்தப்பட்ட ஐந்தாறு நாடகங்களும் வெவ்வேறு வடிவங்களில்
அமைந்திருந்தது மிக முக்கியமான விஷயம். இந்த விழாவினை பல்வேறு
சிரமங்களுக்கிடையே மகிழ்ச்சியோடு நடத்தித்தந்துள்ள தஞ்சைத் தோர்களுக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிரளயன்
அடுத்து பிரளயன் பேசுகையில் கூறியதாவது:
“2016ஆம் ஆண்டு முட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின்  பயிலரங்கில் கருக்கொண்டதுதான், இந்நாடக விழா.
பல்வேறு சிரமங்களுக்குப்பின், இப்போது வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம்.
ஒவ்வோராண்டும் இதேபோன்று தஞ்சையிலேயே நாடகவிழாவை நடத்தலாமா என்கிற எண்ணத்தை நம் தோழர்கள் பலரின் மனதில் இந்த வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது. முப்பது நாடகக் குழுக்களை அழைத்தோம். மிகப் பெரிய சுமைதான். எனினும் தஞ்சை வரவேற்புக்குழுத் தோழர்கள் மிகவும் சிறப்பாக அவர்களுக்கு
ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார்கள்.”இவ்வாறு பிரளயன்  பேசினார்.
சு.வெங்கடேசன்
அடுத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்
செயலாளர் சு. வெங்கடேசன் பேசியதாவது:
“தமிழகத்தில் 30 நாடகக் குழுக்களை இணைத்த முதல் நாடக விழா இதுதான்.
இதற்குமுன் இவ்வாறு இதுவரை நடந்தது இல்லை. அதுவும் இவ்வளவு வெற்றிகரமாக நடந்தது இல்லை. எந்த சச்சரவும் இல்லாமல் நடந்தது இல்லை. ஆனால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அந்த சாதனையைச்  செய்து காட்டி இருக்கிறது. நம் அழைப்பை ஏற்று அத்தனைக் குழுக்களும் மகிழ்ச்சியோடு வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் நம் அமைப்பின் மீது வைத்திருக்கிற மதிப்பும், மரியாதையும், நமக்கு அடிப்படையாக இருக்கின்ற அரசியலும், வீர்யமும்தான் காரணம் ஆகும். உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றி.
இரண்டாவதாக நான் கூறவிரும்புவது, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை.
அதுவும் நான்கு நாட்கள். எவ்விதத் தொய்வும் இன்றி 29 நாடகங்களை ஆறு
வகையான அரங்கங்களில் நடத்தி முடித்து இருக்கிறோம்.
இவ்வாறு நாடகங்களை மட்டுமல்ல. நாடகம் தொடர்பாக இரு கருத்தரங்கங்களையும் இரண்டு நாட்கள் நடத்தியிருக்கிறோம். இசையும் நாடகமும் என்ற தலைப்பில் சு.இராமச்சந்திரன் தலைமையில் சேர்ந்திசை புகழ் இசைமேதை எம்.பி.சீனிவாசனின் மாணவரும், புகழ்பெற்ற இசைஞருமான திருமதி ராஜராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர் பிரபாகர் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கத்தையும், ஒரு நாள் அரங்கியல் – அரசியல் – அழகியல் என்பது தொடர்பாக அ.மங்கை, பிரவீண், பிரளயன் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடலையும் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம்.  சு. இராமச்சந்திரன் கருத்தரங்கத்திற்குத் தலைமையேற்று நடத்திய சமயத்தில் கூத்தனூல் சாத்தனார் நாடகம் தோன்றிய வரலாறு குறித்து எழுதிய கவிதையையெல்லாம் பதிவு செய்தார். குறிப்பாக அ.மங்கையின் உரை மிகவும் முக்கியமான உரையாகும்.
இவ்வாறு இந்த நாடகவிழா பல்வேறு முனைகளிலும் மாபெரும் வெற்றியை
ஈட்டித்தந்திருக்கிறது. இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார்.
அடுத்து, வரவேற்புக்குழு சார்பில் களப்பிரன் பேசுகையில் இந்த நாடகவிழா
நடத்துவது தொடர்பாக ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு நாளும் தாங்கள்
எதிர்கொண்ட பிரச்சனைகளைக் குறித்தும், அவற்றை சமாளித்த விதம் குறித்தும்
தனக்கேயுரிய நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார். நிறைவாக வரவேற்புக்குழு
சார்பில் ச.ஜீவபாரதி நன்றி கூறினார்.
(ந.நி)

Leave A Reply