ஜாராட்சியில் மக்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்பட்டன. மறுபுறம் முதலாளிகள் தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி அடக்குமுறையோடு சுரண்டினர். இதற்கெதிராக தொழிற்சங்க இயக்கம் பலமிக்க போராட்டங்களை நடத்தியது.அதேகாலத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரில் காபன் என்ற பாதிரியார் இருந்தார். அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராய் இருந்தார். அவர் வசதி படைத்தவர்களிடம் நன்கொடைகள் பெற்று அதை ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதனால் அவர் மீது தொழிலாளிகள் மத்தியில் மரியாதையும் செல்வாக்கும் இருந்தது. காபன் பாதிரியாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி தொழிலாளர்களைப் பிரிக்க ஜாரும் முதலாளிகளும் திட்டமிட்டனர். 11.4.1904ல் காபன் தலைமையில் பீட்டர்ஸ்பர்க் ஆலைத் தொழிலாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை போலீஸ் பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டது.பீட்டர்ஸ்பர்க்கில் புத்தியோவ் என்ற பெயருள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிய மூன்று தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதைக் கண்டித்து பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த 360 தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். போட்டி சங்கமான பீட்டர்ஸ்பர்க் ஆலைத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் பாதிரியாரிடம் சென்றனர்.காபன் பாதிரியாருக்கு கர்த்தரைத் தெரியும். கார்ல் மார்க்சைத் தெரியாது. பைபிளைத் தெரியும். மூலதனம் புரியாது. அவர் உடனே அவர்களிடம் ‘உங்கள் பிரச்சனைகள் ஜார் மன்னருக்குத் தெரியாது. அவர் கவனத்திற்குக் கொண்டு போனால் உங்களுக்கு நீதி கிடைக்கும். எனவே அனைவரையும் திரட்டி ஊர்வலமாய் சென்று ஜார் மன்னனை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிப்போம்’ என்றார். அந்தத் தலைவர்களும் அதற்கு இணங்கினர்.அதன்படி 9.1.1905 ஞாயிற்றுக்கிழமை ஜார் அரண்மனைக்கு ஊர்வலமாய் செல்வதென்றும், அதற்கு காபன் பாதிரியார் தலைமை ஏற்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இதை போல்ஷ்விக் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இதன்மூலம் நீதி கிடைக்காது என்றனர். ஆனால் பாதிரியார் சங்கம் ஏற்றது. வேறு வழியின்றி போல்ஷ்விக் தொழிலாளர்களும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தனர். அந்த ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காபன் பாதிரியார் தலைமையில் ஜார் அரண்மனை நோக்கி அணிவகுத்தனர். ஜார் மன்னனின் படம், ஏசு, மரியாள் சிலை, சங்கக் கொடியுடன் சென்றனர்.ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊர்வலத்தினர் மீது போலீஸ் கண்மூடித்தனமாய் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தலைமை தாங்கிய காபன் பாதிரியார் ‘தொழிலாளர்களே, இனி ஜார்மன்னனை நம்பாதீர்கள்’ என்று கூறிவிட்டு தப்பியோடினார்.ஜாரின் அடக்குமுறையால் பலியான தொழிலாளர்களின் நினைவாக அந்த நாள் ரத்த ஞாயிறு என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்குப் பின்புதான் காபன் பாதிரியார் ஜார் மன்னனின் கைக்கூலி என்பது தெரிந்தது. ஜாரின் கொடூரத்தாலும் காபனின் துரோகத்தாலும் அப்பாவித் தொழிலாளர்கள் செத்து மடிந்தனர். 1906 ஏப்ரலில் காபன் பாதிரியார் ஒரு தொழிலாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்தக் கொலைகார தினத்தையே ரஷ்ய மக்கள் ரத்த ஞாயிறு என்று நினைவு கூறுகிறார்கள். ஆனால் அந்த அனுபவத்திற்குப் பிறகே லெனின் தலைமையில் போராடக் களமிறங்கினர்.

எஸ்.ஏ.பெருமாள்

Leave a Reply

You must be logged in to post a comment.