தென்னிந்திய மக்கள் நாடகவிழா, விழாவை நடத்தியவர்கள் மத்தியிலும், பங்கேற்றவர்கள் மத்தியிலும், பார்த்த மக்கள் மத்தியிலும் புதியதொரு நம்பிக்கையை, உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று நிறைவுவிழாவில் உரையாற்றிய அனைவரும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். தஞ்சாவூர் சங்கீத மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழாவின் நான்காம் நாள் நிறைவு விழா சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.

ச. தமிழ்ச்செல்வன்

இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில், நாடகவிழா நிகழ்வுகள் கடந்த நான்கு நாட்களாக மிகவும் வெற்றிகரமான முறையில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 29 நாடகங்கள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு அரங்கங்களில் பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.இங்கே நடைபெற்ற நாடகங்களை நடத்திய கலைக்குழுக்கள் அனைத்தும் தங்கள் நாடகத்தின் உள்ளடக்கத்திற்கேற்ப வடிவங்களை அமைத்துக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள். உண்மையிலேயே மகத்தான முறையில் இந்நாடக விழா வெற்றி பெற்றிருக்கிறது.1979க்குப்பின்னால் சுமார் 39 ஆண்டுகள் கழித்து மீண்டும் தஞ்சையில் நம்அமைப்பின் சார்பில் இந்த விழாவினை நடத்தி இருக்கிறோம் இப்போது நாடகவிழாவை நடத்திய எங்களுக்கு இவ்விழாவினை நடத்துவது தொடர்பாக எந்தப் பயிற்சியும் கிடையாது. முந்தைய நாடகவிழாவில் எங்களில் பலர் கலந்துகொண்டதில்லை. கலந்து கொண்டவர்களும் அநேகமாக பார்வையாளர்களாகத்தான் கலந்து கொண்டோம். அந்த நாடகவிழா உருவாக்கியவர்களில் ஒருவர்தான் பிரளயன். உண்மையில் இது எங்களுக்கு மிகப்பெரிய அனுபவம். இவ்வாறு ச.தமிழ்ச்செல்வன் தன் தலைமையுரையில் கூறினார்.

கே. வேலாயுதம்

அடுத்து கே. வேலாயுதம் அவர்கள் நடைபெற்ற நாடகங்கள் குறித்து ஓர் ஆய்வினை முன்வைத்தார். இங்கே நடைபெற்ற நாடகங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல எதிர்காலத்திற்கு உதவி செய்யக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற 12 நாடகங்கள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு உள்ளடக்கங்களை, பல்வேறு உருவ வடிவங்களைக் கொண்டு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தின. கக்கன்ஜி நாடகம், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காமராசர் மற்றும் பக்தவத்சலம் அமைச்சரவையில் திறன் மிக்க அமைச்சராகச் செயல்பட்ட கக்கன் அவர்களைக்குறித்து கக்கன்ஜி நாடகம் அமைந்திருந்தது.அடுத்து மௌனம் ஒரு போர்க்குற்றம் என்னும் நாடகம், மிகச்சிறந்த நவீன நாடகமாகும். குப்பைகளைக் கூட உயிருள்ள பொருளாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்த நாடகமாகும் அது.புகழ்மிக்க வங்க நாடகாசிரியர் அருண் மகோபாத்யாய எழுதிய நாடகத்தின் கன்னட மொழியாக்கம் மாரீசன பந்துகலு அதாவது மாரீசனின் உறவுகள் என்னும் பொருள்படும் நாடகம். கன்னட மொழியில் இருந்தாலும் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்த நாடகமாகும். புராணங்களின் மறுவாசிப்பு தேவைப்படுகிறது. அதனை மிக வெற்றிகரமாக இந்நாடகம் செய்ததைப் பார்த்தோம்.கி.பார்த்திபராஜா எழுதிய நெடும்பயணம் நாடகம் மூலம் சவ்வாது மலைமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் சென்று வந்தோம்.இந்த நாடக விழாவில் அனைவரையும் அசத்திய நாடகங்கள் என்றால் அவை ஓராள் நாடகங்களாகும். ஓராள் நாடகங்களே எத்தனை வடிவங்களில் இங்கே அரங்கேறின.தங்களின் உள்ளடக்கத்திற்கேற்ப வடிவங்களையும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். இவை அனைத்தும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தன. இவ்வாறு வேலாயுதம் கூறினார்.

ஆதவன் தீட்சண்யா

அடுத்து ஆதவன் தீட்சண்யா உரையாற்றுகையிலும் அதேபோன்று நாடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக மரப்பாச்சி கலைக்குழுவினரின் சுடலையம்மா நாடகத்தைக் குறிப்பிட்டார். என்கவுண்ட்டர் என்றாலே போலிதான். வ. கீதா எழுத்தாக்கத்தில் அ.மங்கை இயக்கத்தில் உருவான இந்நாடகத்தை பார்க்கும் எவரையும், ஆவேசம் கொள்ளச் செய்யும் என்றார்.சுடலையம்மாவின் குரல் என்கவுண்ட்டரில் கொல்லப்படும் சீராளன் போன்றவர்களின் ஒவ்வொரு தாயின் குரலுமாகும் என்று ஆதவன் தீட்சண்யா கூறினார்.சவிதா ராணியின் ஓராள் நாடகம் சாந்தியடையட்டும் என்னும் நாடகம். இது பண்பாடு என்னும் பெயரில் பெண்ணின் மீது நடத்தப்படும் அத்துமீறல்களை உரக்கப் பேசும் நாடகமாகும் என்றார்.

கரிவள்ளூர் முரளி

அடுத்து, அபுபக்கரிண்டே உம்ம பறையுன்ன என்னும் நாடகத்தை எழுதிய கரிவள்ளூர் முரளி உரையாற்றினார். கையூர் தியாகிகளின் ஒருவரான அபுபக்கரின் தாயினது பார்வையில் கேரள மாநில சமகால அரசியலை அலசும் நாடகம் என்று விளக்கிய முரளி கேரள இன்றைய நாடக மேடைகளின் நிலைமைகளை விளக்கினார்.கருப்பு கருணா, பிரளயன் மற்றும் தமுஎகசங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், களப்பிரன் முதலானோரும் நாடகவிழாவின் தாக்கங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள். நிறைவாக வரவேற்புக்குழு செயலாளர் ச.ஜீவபாரதி நன்றி கூறினார். நான்காம் நாளான இன்று புதுவை யாழ் கலைமையத்தின் “நிராயுதபாணிகள்”, நீலகிரி புகிரி அரங்காட்டத்தின் “பெத்தவன்”, சவிரா ராணியின் ஓராள் நாடகம் “சாந்தியடையட்டும்”, மூன்றாம் அரங்கின் “நான்காம் ஆசிரமம்” என்னும் ஓராள் நாடகம், கண்ணனூர் ரஜிதா மது நடத்திய “அபுபக்கரிண்டே உம்ம பறையுன்ன” என்னும் மலையாள ஓராள் நாடகம், புதுகை பூபாளம் குழுவினரின் “நாகரிக கோமாளிகள்”, ஓசூர் டிவிஎஸ் அகடமியின் “பதனம்” நாடகம், சென்னைகலைக்குழுவின் “உபகதை” ஆகியவை அரங்கேறின. (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: