நீலகிரி: நீலகிரி பகுதிகளில் நிலவிவரும் கடுமையான வறட்சியால் இறந்து போன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக மசினகுடி, மாயார் மற்றும் ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் ஆறுகள், மற்றும் குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும், அங்கு வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் ஆடு மாடுகளை வளர்த்து அவற்றின் மூலம்தான் வருமானம் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது அங்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், கால்நடைகள் போதிய உணவு மற்றும் குடிக்க தண்ணீர் இன்றி உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. மேலும், மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் செல்லும் கால்நடைகள் அங்கேயே இறந்துவிடுவதால், செலவு செய்து அதனை முறைப்படி அடக்கம் செய்ய போதிய பணமில்லாததால்,  அவற்றை அப்பகுதிகளிலேயே விட்டுவிட்டு வருவதாகவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், தங்களுக்கான வருவாயில் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகவும், இறந்து போன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply