புதுதில்லி, பிப். 22 –
தமிழில் இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தில்லியில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.
‘ஒரு சிறு இசை’ என்ற தனது சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம், ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இதன்படி 2016-ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழா, புதன்கிழமையன்று தில்லியில் நடைபெற்றது. இதில், வண்ணதாசனுக்கு தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும், பாராட்டுப் பட்டயமும் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. 70 வயதாகும் வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற வண்ணதாசன், திருநெல்வேலி சிதம்பரநகரில் வசித்து வருகிறார். 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய வண்ணதாசன், ‘கல்யாண்ஜி’ என்ற புனைப்பெயரில் 13 கவிதைத் தொகுப்புக்களையும், வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் 13 சிறுகதை, நாவல் மற்றும் கடிதத் தொகுப்புக்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.