ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 11-ந்தேதி தேசிய மகளிர் பாராளுமன்ற மாநாடு நடந்தது.

இதில் பங்கேற்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இதையடுத்து அவர் மகளிர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து தன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவரை விமான நிலைய வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி ரோஜா ஆந்திர டி.எஸ்.பி. சாம்பசிவராவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர், “மகளிர் பாராளுமன்றத்தில் நீங்கள் (ரோஜா) பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்யப்போவதாக தகவல் வந்து உள்ளது. இதனால் உங்களை கைது செய்து ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று கூறி உள்ளார்.

இதற்கு ரோஜா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆந்திர டி.ஜி.பி. சாம்பசிவராவ், தன்னவரம் நகர போலீஸ் கமி‌ஷனர் கவுதம் சாவங், விமான நிலைய ஏ.சி.பி. ராஜீவ்குமார் மற்றும் 3 போலீசார் மீது ரோஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்காக தனது வக்கீலுடன் ரோஜா தன்னவரம் ஜூனியர் கூடுதல் சிவில் நீதிமன்றத்துக்கு வந்தார். அங்கு தனது மனுவை தாக்கல் செய்தார். அதில், தேசிய மகளிர் பாராளுமன்றத்தில் என்னை பங்கேற்கவிடாமல் செய்ய போலீசார் திட்டமிட்டே செயல்பட்டனர்.

வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அழைத்து சென்றனர். இது பெண்ணின் உரிமைக்கு பங்கம் ஏற்படுத்துவதாகும். எனவே ஆந்திர டி.ஜி.பி. சாம்பசிவராவ் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இவ்வழக்கை மார்ச் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.