சென்னை, பிப்.21-

வறட்சி நிவாரணம் தொடர்பாக ஜனவரி 10ந் தேதி அரசு அறிவித்தது. ஏறத்தாழ ஒன்றரை மாதம் கழித்து வறட்சி நிவாரணத்திற்கான தொகையை அறிவித்து, பிப்ரவரி 21 செவ்வாயன்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தில், இருந்த நிலையற்ற தன்மையே இதற்கு அடிப்படை காரணமாகும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
“விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. சுமார் 200 விவசாயிகள் மாண்டுபோயுள்ள நிலையில், 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. கடன் வலையில் சிக்கி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மீள முடியாத நிலையில் பல்வேறு இன்னல்களுகு ஆளாகியுள்ளனர். மீதி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சரின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடாதது தமிழ அரசின் அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது” என்று பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஜனவரி 31ந் தேதி அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்த போது, பயிர் பாதிப்பிற்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானது அல்ல என்பதை சுட்டிக்காட்டி உயர்த்தி அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினோம். அத்துடன் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் வேலையின்றி, கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினோம். ஆனால் விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் அறிவிக்காதது வன்மையான கண்டனத்திற்குரியது.
மத்திய அரசிடம் 39 ஆயிரம் கோடி ரூபாய் கோரியுள்ள மாநில அரசு, பயிர் இழப்புகளுக்கு நிவாரணம், கால்நடைத் தீவனம் மானியம், குடிதண்ணீர் வழங்கல், வனவிலங்குகளுக்கு தீவனம், குடிநீர் என அனைத்திற்கும் சேர்த்து ரூ.2803 கோடி ரூபாய்க்கான அறிவிப்பை மட்டுமே தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
வறட்சியினால் ஏற்பட்டுள்ள கொடூரமான பாதிப்பை அரசு உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
எனவே தமிழக அரசு, வறட்சியினால் மாண்டுபோன அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவதுடன், பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும், அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு, நிவாரணம் மற்றும் மாதம் 30 கிலோ அரிசி வழங்கவும் அரசு முன்வர வேண்டும். அத்துடன், விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும், ஜப்தி, கெடுபிடி கடன் வசூல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: