பா.வீரமணி

1917ஆம் ஆண்டில் மாமேதை லெனின் சோவியத் ஆட்சியை அமைத்தபோது, பொதுவுடைமையும், உலக சமாதானமும் சோவியத்துகளின் பிரிக்க முடியாத கொள்கையாகும் என்று பிரகடனம் செய்தார். அதற்குக் காரணம் மூவகைப்பட்டது எனலாம். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் இரண்டு கோடி மக்களை இழந்தது முதற்காரணமாகும். அப்போரில் உலக மக்கள் பல கோடிப் பேர் இறந்தது இரண்டாம் காரணமாகும். அடுத்து இப்படிப்பட்ட பேரழிவு மனிதகுலத்துக்கு இனி ஏற்பட்டுவிடக்கூடாது என்பது மூன்றாம் காரணமாகும். இதன்பொருட்டு உலக நாடுகளிடையே படை பலக் குறைப்பைப் பற்றியும், ஆயுதக் குறைப்பைப் பற்றியும், அணு ஆயுதங்களை அழிப்பது குறித்தும், அந்நாடு பல உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டு உலக சமாதானத்தைப் பேணி வளர்த்தது.
சோவியத் யூனியன் மட்டும் அன்று இல்லையென்றால், இன்னொரு பெரும் போர் நிகழ்ந்து உலகத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இதனை நம்மவர்கள் சிந்திக்க வேண்டும். போர்களின் பேரழிவைப் பற்றிப் பெரும் ஆய்வை நடத்திப் பல வெளியீடுகளை வெளியிட்டது. அந்நாடேயாகும். அவ்வெளியீடுகளில் அந்நாடு குறிப்பிட்டுள்ள அரிய செய்திகளும், சீரிய புள்ளி விவரங்களும் பற்பல; அவற்றில் ஒன்றைப் பார்ப்போம். அவ்வெளியீடு குறிப்பிட்ட ஒரு செய்தி, வரலாற்றுக் காலந்தொட்டு, 1970 வரை போர்களால் இறந்த மக்களின் எண்ணிக்கை 320 கோடியாகும் என்றது. இந்த எண்ணிக்கை இப்போதைய மக்கள்தொகையின் சரிபாதியாகும். அவற்றால் இழந்த பொருளின் மதிப்போ அளவிடற்கரியது. இப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்தும் போர்கள் மனித சமுதாயத்துக்குத் தேவையா? தேவையற்றவை. போர்களை உண்டாக்குவது முதலாளித்துவப் போட்டியும் வல்லாதிக்கமுமே ஆகும். பொருளாதார ஏற்றத் தாழ்வையும் சுரண்டலையும் ஏற்படுத்தி, மக்களை இழிநிலைக்கு உள்ளாக்குவதும், வறுமைக்கு உட்படுத்தி அவர்களை அடிமைகளாக, நடைப்பிணங்களாக மாற்றுவதும் முதலாளித்துவமேயாகும். முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவம் இத்துடன் நின்றுவிடாமல், அது தன் சுயநலத்துக்காகப் போர்களையும் ஈவு இரக்கமின்றி உண்டாக்கிப் பேரழிவை ஏற்படுத்துகிறது. இதற்கு அமெரிக்கா, இராக்கின் மீது தொடுத்த போர் நம் காலத்திய சான்றாகும். முதலாளித்துவம் வறுமையை உண்டாக்கிச் சிறுகச் சிறுக மனிதகுலத்தை அழிப்பதை மட்டுமின்றி, மனிதகுலத்தைப் போரின் மூலம் பூண்டின்றி அழிப்பதும் அதுவேயாகும் என்பதை நன்கு உணர்ந்த சிந்தனையாளராகச் சிங்காரவேலர் இருந்ததால்தான், போரைப் பற்றிய பாடங்களுக்கு அவர் இடம் கொடுக்கக்கூடாது என்றார்.
மற்றும் வீரம், ஆண்மை, புகழ் எனும் பெயரில் வன்மத்தை, வன்முறையை, அழிவை, உயிர்ப்பலியைப் போர் ஏற்படுத்துவதால்தான் அவர் போரை வெறுத்தார்.
போரின் அழிவைக் குறித்து, ‘‘யுத்தம் யுத்தம் யுத்தம், யுத்த நினைவுகள், ஆயுத பரிகரணம், போர்க்கோலம் போன்ற கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவரின் இந்தக் கட்டுரைகளும் மற்றக் கட்டுரைகளும் ஆலமரத்தைத் தன்னுள் கொண்ட ஆலவிதையைப் போன்று பெருஞ் சிந்தனையை உள்ளடக்கியவை. உலக சமாதானம், அத்துணை அளவுக்குப் பரவாத காலத்தில் எத்துணை விழிப்புடன் சிங்காரவேலர் இருந்துள்ளார் என்பதை இதனால் உணரலாம்.
– சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டு நூலிலிருந்து…

 

Leave a Reply

You must be logged in to post a comment.