கவுகாத்தி, பிப். 20 –

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, நாகலாந்து முதலமைச்சர் ஜெலியாங் ராஜினாமா செய்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில், ஜெலியாங் தலைமையிலான நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, பழங்குடியினர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தனது பதவியை ஜெலியாங் ராஜினாமா செய்ததை அடுத்து, நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில், புதிய முதல்வர் பதவியை பெற ஆளுங்கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

நாகலாந்து சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ள நிலையில்,  ஆளுங்கட்சியான நாகலாந்து மக்கள் முன்னணிக்கு 48 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.

மீதமுள்ள 8 பேரும் சுயேட்சை  உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் லேஜேட்சுவை முதல்வராக்குவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், நாகலாந்து அரசியலில் புதிய திருப்பமாக முன்னாள் முதல்வரான நீபியூ ரியோவும், முதல்வர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார்.

அவருக்கு, 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, ரியோவுக்கு ஆதரவு அளிக்கும், 40 சட்டமன்ற உறப்பினர்களும் அண்டை மாநிலமான அசாமில் உள்ள சுற்றுலாத்தலமான காஜிரங்காவில் ஒரு நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆச்சார்யா, இன்று அல்லது நாளை நாகலாந்து திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரிடம் இருந்து உத்தரவு வரும்வரை, 40 எம்எல்ஏக்களும் அசாம் நட்சத்திர விடுதியிலேயே தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.