ஓசூர் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் உத்தனப்பள்ளி அடுத்த சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேஷாத்திரி (42). இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு ராமன், லட்சுமணன் என இருமகன்கள் உள்ளனர். இரட்டை சகோதரர்களான இவர்களில் ராமு வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. லட்சுமணன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சானமாவு அடுத்த வனத்தை ஒட்டியுள்ள உப்பரதம்மண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சேஷாத்திரி ஆட்டுப்பட்டி அமைத்து 25 ஆடுகளை வளர்த்து வந்தார். இதனால், இரவு நேரத்தில் ஆடுகளின் பாதுகாப்புக்காக பட்டியில் சேஷாத்திரி தங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு சேஷாத்திரி தனது விவசாய நிலத்துக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை நிலத்தை ஒட்டியுள்ள மண்சாலையில் சேஷாத்திரி சடலமாக கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த டிஎஸ்பி சவுந்தரராஜன், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணன், உத்தனப்பள்ளி போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், முன் விரோதம் காரணமாக சேஷாத்திரியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பது தெரிந்தது.

ஏற்கெனவே இவர் கடந்த 2015-ம் ஆண்டு பட்டியில் தங்கியிருந்தபோது சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்ததும், இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Leave A Reply