நீலகிரி: உதகை அருகே தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள காந்தள் பகுதியில் ரியாஸ். இவரது மனைவி ராபியா. இவர்களுக்கு 9- மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சனியன்று இரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்க வருவது போல் ராபியா வீட்டிற்கு வந்துள்ளார். இதில் ராபியா மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தை ஆகியோர் மட்டும் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த பெண் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து ராபியா தண்ணீர் எடுத்து வந்து பார்த்தபோது அந்த பெண் அவர்களது 9மாத பெண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையுடன் மாயமான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதகையில் இருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களிலும் மற்றும் சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply