உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இந்திய
ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக களப்பணியாற்றி, அதன் நீட்சியாக மார்க்சி
ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் ஒன்றியசெயலாளராக தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவரான எஸ்.ஜி. ரமேஷ்பாபு அந்தப் போராட்டங்களின் ஊடாக ‘பிறிதொரு பொழுதில்’ என்ற இந்த நூலைப் படைத்தி
ருக்கிறார்.

ஒருவருடைய வாழ்க்கை அனுபவங்கள்தான் ஒருவரை படைப்பாளியாக மாற்றும். ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தான்முடிவு செய்ய முடியும். தன் அனுபவத்தை இந்த உழைப்பாளி மக்களின் வளர்ச்சிக்காக மாற்றுகிறவர்கள்தான் சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும். அப்படி ரமேஷ்பாபு தன் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து ‘பிறிதொரு பொழுதில்’ என்ற நூலை களப்பணியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ‘பயணக்குறிப்புகள்,’ ‘தோழமைக்கு மொழி இல்லை,’ ‘மனிதர்களை உற்றுப்பார்ப்போம்,’ ‘கடற்கரை ஓர் அறிமுகம்’ போன்ற கட்டுரைகள் நேரடியாகக் களத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை அழகாகக் கோர்த்து வாசகக் காதலர்களுக்கு மாலையாகச் சூட்டியிருக்கிறார்.

பகலில் சூரியனாலும் இரவில் மின்சாரத்தாலும் ஜொலிக்கும் சென்னையில் உள்ள வானை முட்டும் கட்டடங்கள்தான் நமக்கு திட்டமிட்டு காட்டப்படுகின்றன. ஆனால் இது மட்டும் சென்னையின் அடையாளமாக மாறிவிடாது என்பதை உணர்த்துகிறது ‘பயணக் குறிப்புகள்’ கட்டுரை.

பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரை செல்கிறது இந்தப் பயணம். இது ஏதோ ஜாலியாக சென்னையை சுற்றிப்பார்க்கும் பயணம் கிடையாது. சென்னையின் அடையாளமாக இருக்கும் உழைப்பாளி மக்கள் வாழும் ஐந்துகுடிசை, நெடுஞ்செழியன் நகர், நடுக்குப்பம், வி.ஆர். பிள்ளைதெரு, ரோட்ரி நகர் போன்ற பகுதிகளில் எந்தவித வசதிகளும் இல்லாமல், பகல் முழுக்க உழைத்து,இரவு கொசுத்தொல்லையால் தூக்கத்தை இழந்து வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை பிரதிபலிக்கிறது.

திருவல்லிக்கேணியின் பார்த்தசாரதி கோயிலுக்கு செல்ல செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு தடை. இந்த தடையை உடைத்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ராமமூர்த்தி. இப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளையும் தன் பயணங்களில் சொல்லிக்கொண்டே வருகிறார் ரமேஷ்பாபு.

நாம் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறோம்; பேசியிருக்கிறோம்; முன்பின் தெரியாத
வர்களுடன் பயணங்கள் கூட செய்திருக்கிறோம்; ஆனால் அழுக்குப்படிந்த சட்டை, பரட்டை
த்தலைமுடி, உடல் எல்லாம் பட்டைப்பட்டையாக அழுக்கு. அவர் கையில் (ஒரு பிரோ) துணி மூட்டை – இப்படி அழுக்கின் மொத்த உருவமாக இருக்கும் மனிதனிடம் நாம் பேசியிருக்கிறோமோ என்றால் இல்லை என்ற பதில் தான் அதிகமாக வரும். ஆனால்
ரமேஷ் இப்படி ஒரு மனிதனிடம் பேசிய அனுபவத்தைக் கூறுகிற ‘மனிதர்களை உற்றுப்பார்ப்போம்

’ கட்டுரை நாமும் பேச வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் வி.பி.சிந்தன், குசேலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருந்த திமுகவை ‘இரும்புக் கரங்கொண்ட ஹிட்லரின் புதல்வர்கள்/ நாசிச நிர்வாண நாடகத்தை / ஆவடியில் போய் அரங்கேற்றினார்கள் / தொழிலாளர் வர்க்கத்தின் தூய புதல்வர்கள் மேல்/ கைவைக்கத் துணிந்த காட்டு மிராண்டிகளே…’ என கடுமையாக தன் கவிதைகளில் சாடிய தோழர் இன்குலாபின் வாழ்க்கையை கவித்துவத்தோடு ‘தோழர் இன்குலாப்’ என்ற பகுதியில் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறார்கள் என்பதையும், தன் ஊரைவிட்டு, தன் மாநிலத்தை விட்டு வேறு இடங்களுக்குப் பிழைப்பைத் தேடி அலைகிறார்கள் என்பதையும், இப்படிச் செல்லும்போது பெண்கள் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதையும் ‘புலம் பெயர்தல்; தோழமைக்கு மொழி இல்லை’ என்ற கட்டுரையில் எடுத்துரைத்து, அவர்களுக்காகப் போராட வேண்டும் என்பதை உனர்த்துகிறார்.

கண்ணகியின் வரலாற்றை நாம் பல வடிவங்களில் படித்திருப்போம். ஆனால் இப்படியும் இருக்கலாம் என்று ஒரு மறுவாசிப்புப் புனைவாக ‘சிலம்பு’. தன் மதத்தை மட்டுமே இங்கு வணங்க வேண்டும், வேறுமதங்கள் வளரக்கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் சங்க காலந் தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

வம்சி புக்ஸ் பதிப்பகம் நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகம் களப்பணியாளர்கள் எல்லோருமே இது போன்று தம் அனுபவங்களைப் படைப்பாக்க வேண்டும் என்ற அவாவையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்நூல். ரமேஷ்பாபுவின் களப்பணியோடு எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.

பிறிதொரு பொழுதில்
ஆசிரியர்: எஸ்.ஜி.ரமேஷ்பாபு
வெளியீடு: வம்சி புக்ஸ்,
19, டி.எம்.சாரோன்.
திருவண்ணாமலை – 606 601
பக்:128 விலை ரூ.100/-

-வீரபத்ர லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.