-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நிதிச்சட்டமுன்வடிவு மார்க்கத்தில் ஈடுபடுவதை ‘‘அரசாங்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அது தன்னைக் காத்துக்கொள்வதற்காக ‘நிதிச் சட்டமுன்வடிவு’ என்னும் உபாயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இவ்வாறு நிதிச்சட்டமுன்வடிவு என்பது துஷ்பிரயோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும்.’

மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையைப் புறக்கணித்துவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ‘‘நிதிச் சட்டமுன்வடிவு’’ என்னும் வரையறையையே துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாக, மாநிலங்களவையை திட்டமிட்டு தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு, ஆதார் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவு, மக்களவை சபாநாயகரால் நிதிச் சட்டமுன்வடிவு என்று கருதப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின்படி, 110ஆவது பிரிவு, ஒரு நிதிச் சட்டமுன்வடிவுக்கான விதிகளை வரையறுத்திருக்கிறது. இந்தியாவின் தொகுப்பு நிதியத்திற்கு (Consolidated Fund of India) சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அல்லது வரி விதிப்பு தொடர்பானவற்றுடன் இது சம்பந்தப்படுகிறது. மக்களுக்கு சேவைகள் வழங்குவதற்காக ஒரு பிரத்யேக அடையாள எண் (a Unique Identification Number) அளித்திடுவது சம்பந்தமான ஆதார் சட்டம்,

எந்தவிதத்திலும் நிதிச் சட்டமுன்வடிவாகக் கருதப்பட முடியாத ஒன்றாகும். ஆயினும், மக்களவை சபாநாயகர் அவ்வாறு தீர்மானித்தார். ஒரு நிதிச் சட்டமுன்வடிவு மாநிலங்களவையால் திருத்தப்பட முடியாததாகும். மேலும் அதனை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை திருப்பி அனுப்பிட வேண்டும். இவ்வாறு, ஆதார் சட்டமுன்வடிவு, மாநிலங்களவையில் ஆய்வுக்காகவும், திருத்தங்களுக்காகவும் தாக்கல் செய்யப்படாது தந்திரமானமுறையில் தப்பித்துக்கொண்டது.

மோசமான தந்திரம்…

இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக, ஏராளமான சட்டமுன்வடிவுகளை நிதிச்சட்டமுன்வடிவு என்ற பெயரில் அறிமுகப்படுத்தும் வேலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களவையில், 2016ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபோது, அது அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு (FCRA- Foreign Contribution Regulation Act) ஒரு திருத்தத்தை உள்ளடக்கியிருந்தது.இந்தத் திருத்தம் என்னவென்றால், அந்நிய நிறுவனங்களின் துணை அமைப்புகள் (subsidiaries) எதுவும் இந்தியாவில் இயங்கினால் அவற்றையும் இந்திய நிறுவனங்கள் என்றே கருதிட வேண்டும் என்பதாகும். அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்தம் எந்த விதத்திலும் நிதிச் சட்டமுன்வடிவின்கீழ் வராது. ஆயினும் இது நிதிச் சட்டமுன்வடிவாகக் கருதப்பட்டது. அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அந்நிய நிறுவனங்களிடம் நிதி உதவிகளைப் பெற்றிருந்தன. அவற்றுக்கெதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலிருந்தன. இவற்றிலிருந்து தப்பித்திட வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு திருத்தத்தை தனியாகக் கொண்டுவந்தால், பின் அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருந்திருக்கும். மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இல்லாததால், அது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ‘‘நிதிச் சட்டமுன்வடிவு’’ என்னும் உபாயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அருண்ஜெட்லியின் மிரட்டல்

இப்போது கொண்டுவரப்பட்டிருக்கிற 2017 நிதிச் சட்டமுன்வடிவில் (Finance Bill of 2017) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றிற்குத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இத்திருத்தங்கள் தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதற்கு வகை செய்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது தம்பட்டம் அடிக்கப்படுகிறது.

ஆயினும், இது எந்தவிதத்திலும் நாட்டின் வரிகளுடனோ அல்லது இந்தியாவின் தொகுப்பு நிதியத்துடனோ சம்பந்தப்பட்டது அல்ல. எனவே இந்தத் திருத்தங்கள் நிதிச் சட்டமுன்வடிவின் வரையறையின்கீழ் எவ்விதத்திலும் வரமுடியாது.

மோடி அரசாங்கம், நிதித் சட்டமுன்வடிவு என்னும் உபாயத்தைத் தவறென்று தெரிந்துதான் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறது என்பதை, 2015 ஆகஸ்ட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த ஓர் அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டசமயத்தில் அவர் என்ன கூறினார் தெரியுமா? ‘‘இவ்வாறு முட்டுக்கட்டை தொடருமானால், பின் ஏராளமான சட்டமுன்வடிவுகள் நிதிச் சட்டமுன்வடிவாகவே கொண்டுவரப்படும்,’’ என்றார்.

மக்களவை சபாநாயகரை வைத்து மாநிலங்களவை தரம் தாழ்த்தும்…
அரசமைப்புச் சட்டத்தின் 110ஆவதுபிரிவின்படி, நிதிச் சட்டமுன்வடிவு எது என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகரைச் சாரும். பல்வேறு சட்டமுன்வடிவுகளையும், நிதிச் சட்டமுன்வடிவுகளே என்று மக்களவை சபாநாயகரின் ஒப்புதலைப் பெறுவதன்மூலம், அரசாங்கம் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள திட்டத்தை மீறி, மாநிலங்களவையை தரம் தாழ்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மூன்று பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax–the Central GST law, the Integrated GST law and the Compensation law) சட்டமுன்வடிவுகள் எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. இவை மத்திய – மாநில உறவுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவைகளாகும். நாட்டின் வளங்களை மத்தியிலும், மாநிலங்களிலும் பிரித்துக்கொள்ளப்படுவது தொடர்புடையவைகளாகும். மாநிலங்களின் கவுன்சில் என்று பொருள்படும் மாநிலங்களவை இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், மோடி அரசாங்கமானது, மாநிலங்களவையிலிருந்து வலுவானமுறையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும்கூட, அதனையும் மீறி, இவற்றை நிதிச்சட்டமுன்வடிவுகளாகக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையானது முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஒன்றாகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஆதார் சட்டமுன்வடிவு, நிதிச் சட்டமுன்வடிவாக நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் இருந்து வருகிறது. நிதிச் சட்டமுன்வடிவைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரத்தை மக்களவை சபாநாயகர் பெற்றிருப்பதால், நாடாளுமன்றத்திற்குள்ளான நிர்வாக நடைமுறையில் தலையிடமுடியுமா, அதற்குப் போதுமான காரணங்கள் இருக்கிறதா என்று தீர்மானிப்பது என்பது, நீதிமன்றத்திற்கு சிக்கலான பணியாக மாறி இருக்கிறது.

ஆயினும், இப்போது நமக்குத் தேவைப்படுவது என்னவெனில், இவ்வாறு மாநிலங்களவையை தரம் தாழ்த்திட அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒரு கூட்டு நிலைப்பாடு எடுத்திட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு நிதிச்சட்டமுன்வடிவு என்பது துஷ்பிரயோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும்.
(பிப்ரவரி 15, 2017)
(தமிழில்: ச. வீரமணி)

 

Leave A Reply