சென்னை,
கோவையில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மைய கட்டிடம் குறித்து மத்திய மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் கார்பரேட்சாமியார் ஜக்கி வாசுதேவ்- ன்க ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் 1 லட்சம் சதுர அடியில் நகர் ஊரமைப்பு துறை மற்றும் மலைதளபாதுகாப்பு குழுமத்தின் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தின் ஆக்கிரமிப்பு கட்டிடத்தால் யானைகளின் வழித்தடம் மறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதால் மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து இடிக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கூடாது  என்று வெள்ளிங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு குழு தலைவர் முத்தம்மாள் சென்னை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது உரிய அனுமதியின்றி வனப்பகுதியில் கட்டிடங்கள் கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கூடாது  என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்பு துறை, மாநில வீட்டுவசதித்துறை, மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம் ஆகியோர் வரும் மார்ச் 3ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் 2லட்சம் சதுரஅடியில் வனப்பகுதியை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டிடங்களை எழுப்பி உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலையில் 2013ல் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது மேலும் 1 லட்சம் சதுர அடி ஆக்கிரமிப்பில் ஈஷா யோகா புதிய கட்டிடங்களை கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வருகை

இந்நிலையில் ஈஷா  யோகா மையத்தால் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 112 அடி உயரத்தில்  ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 24ம் தேதி கோவை வர உள்ளார். இதனால் மோடியின் வருகைக்கு மலைவாழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அநேகமாக இந்த சிலையை மோடி திறந்து வைத்தால், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஒரு சிலையை ஒரு நாட்டின் பிரதமரே திறந்து வைக்கும் அவலம் அரங்கேற்றப்படும்.  சட்டத்தை மீறி சர்வாதிகாரத்தை நிலைநாட்டியவர் என்ற பெயரும் மோடிக்கு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-

Leave A Reply