ஜேஎன்யு மாணவர்கள், ஆசிரியர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி துணைவேந்தரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டித்து மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் நாடாளுமன்றம் நோக்கி செவ்வாய்க்கிழமையன்று மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.பல்கலைக்கழக மானியக்குழு 2016 மே மாதத்தில் ஓர் அரசிதழ் அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. அதனை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) துணைவேந்தர் எவரையும் கலந்தாலோசிக்காமல் ‘‘ஜனநாயக விரோதமான’’ முறையில் அமல்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளார். இதனைக் கண்டித்தே ஜேஎன்யு ஆசிரியர் சங்கத்தினர் சங்கத்தின் சார்பில் இக்கண்டனப் பேரணி நடைபெற்றது. இதற்கு மாணவர் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.இதனை அமல்படுத்தினால் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கடுமையாக வெட்டிச் சுருக்கப்படும்’’. எனவே இதனை அனுமதிக்கக்கூடாது என்று இவர்கள் வலியுறுத்தினர்.

எம்.பி.க்கள் பங்கேற்பு

ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு ஆதரவாக பேரணியில் ஏ.சம்பத் (சிபிஎம்), து. ராஜா (சிபிஐ), திக்விஜய் சிங்(காங்கிரஸ்) மற்றும் அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றார்கள். பேரணியில் இவர்கள் உரைநிகழ்த்துகையில் தாங்கள் ஆசிரியர்கள்-மாணவர்களின் கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாகவும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இப்பிரச்சனையை எழுப்பி தீர்வு கண்டிட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்கள்.

அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை

ஜேஎன்யு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அயிஷா கித்வாய், பேரணியின் முக்கியத்துவம் குறித்து உரைநிகழ்த்துகையில், சென்ற ஆண்டு பிப்ரவரியில் ஜேஎன்யு ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணி அப்போது ஜேஎன்யு வெளி சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்றது என்றும், ஆனால் இப்போது நடைபெறும் பேரணி துணை வேந்தரின் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து நடைபெறுவதாகவும் கூறினார். 2016 மே மாதத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அரசிதழ் அறிவிக்கையை அமல்படுத்துவதன்மூலம் ‘‘ஜேஎன்யு-வை இழுத்துமூட’’ துணைவேந்தர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றும், இதனை அமல்படுத்தினால் எம்.பில்,.பி.எச்டி. இடங்கள் கடுமையாக வெட்டிக் குறைக்கப்படும் என்றும் கூறினார்.

அகடமிக் கவுன்சிலில் பேசுவதில்லை

அவர் மேலும் கூறுகையில், துணை வேந்தர் ஜேஎன்யு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், அது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை என்றும், ஜேஎன்யு-வின் சட்டப்படி பல்கலைக்கழகத்தின் கல்வி தொடர்பாக (யஉயனநஅiஉ டகைந) பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சில்தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கூறினார்.ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் சார்பில் தலைவர்கள் பேசுகையில் துணைவேந்தர் ஜேஎன்யு சேர்க்கை தொடர்பாகவும், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடர்பாகவும், துணை வேந்தர் தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஜேஎன்யு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய அகடமிக் கவுன்சில் போன்ற இடங்களில் பேச மறுக்கிறார் என்றும் மாணவர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசக்கூட மறுக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள்.துணைவேந்தரின் நடவடிக்கையானது எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கையை மட்டுமல்ல, தற்போதைய எம்.பில்,,பிஎச்டி மாணவர்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியவைகளாகும் என்றும் விளக்கினார்கள்.

(ந.நி.)

Leave A Reply