-மு. இளங்கோ

தமிழகத்தில் கடந்த 9.9.2016 முதல் ஏறத்தாழ ஆறு மாதகாலமாக பத்திரப்பதிவிற்கான தடை நீடிக்கிறது. அதனால் வேலை இழந்து வாடும் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை, மேலும் மேலும் துயரத்திற்குள்ளாகி வருகிறது.

பத்திரப் பதிவுத் தடை நீட்டிப்பு தொடர்வதால் சில ஐயங்கள் எழுகின்றன. 2000ஆம் ஆண்டில் அப்போதைய அரசு எதிர்க்கட்சியின் சொத்துக்களை விற்கவிடாமல் தடுத்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என திட்டமிட்டு பத்திரப் பதிவுக்கு தடையுத்தரவு போட்டது. தேர்தல் நேரம் அது. ஆனால் எதிர்க்கட்சி வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்சி எடுத்த ஆயுதம் அதற்கே எதிராகத் திரும்பியது. ஏனெனில் பத்திரப்பதிவுத் தடையால் மக்களிடம் பணபுழக்கம் பெருமளவில் நின்று போனது. அதன் அதிருப்தி ஆளுங்கட்சியைத் தோல்வியுறச் செய்தது.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போனதற்கும், நீளும் பத்திரப்பதிவுத் தடைக்கும் இதே போன்றதொரு காரணம் உள்ளதோ எனத் தோன்றுகிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் படுவீழ்ச்சியடைந்த அடுக்குமாடி கட்டுமான பெருமுதலாளிகள், பத்திரப்பதிவு தடைக்குள் ‘அங்கீகாரம்’ என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தம் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டு சிறு, குறு உதிரி கட்டுமான தொழில் முனைவோர்களை வீழ்த்துகிறார்களோ என்றும் இவர்களிடம் பிரதிபலனடைந்து கொண்டு அரசு நிர்வாகத்தினரும் வேண்டுமென்றே காலநீட்டிப்புக் கேட்கின்றனரோ என்ற ஐயம் எழுகிறது.

விளை நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றுவதில் சட்டச்சிக்கல் நேர்ந்தால், தவிர்க்க இயலாத காரணங்களால் தன் சொத்தான விளை நிலங்களை விவசாயி யாரிடம் விற்பார்? மனைப்பிரிவு செய்பவரை வாங்க விடாமல் செய்தாயிற்று; பக்கத்து விவசாயி விலை கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை; அப்படியானால் அந்த விவசாயி மொத்தமாய் வாங்கிப் போட்டு தொழில் செய்யப்போகிற, விவசாயமும் பார்க்கப் போகிற கார்ப்பரேட் கம்பெனிகளிடம்தான் விற்பார். ரோட்டடியை நல்ல விலை கொடுத்து வாங்கும் கார்ப்பரேட் கம்பெனிக்காரன், உற்பத்திக்கான பாதை, நீர்வழித்தடங்களை மறைத்து அடி மாட்டு விலைக்கு வாங்கிப்போட்டு தம் மனம் போல் எந்தப் பயன்பாட்டிற்கு வேண்டுமெனினும் பயன்படுத்தும் திட்டமோ எனும் சந்தேகமும் எழுகிறது.

எளிதில் தன் விவசாய பூமியை எந்த விவசாயும் விற்க மாட்டார். விற்றாலும் அவர் நடைபிணமாகவே வாழ்வார். அப்படிச் சூழலிலும் விற்க வேண்டிய நிலை வரும் போது, விற்க முடியாது என தடையிட்டால், அவர் புத்திசாலித்தனமாய் தப்பிப்பதாய் நினைத்து கார்ப்பரேட்டுகளின் வலையில்தான் வீழ்வார் என்ற திட்டமோ என்கின்ற ஐயமும் இருக்கிறது.

விளை நிலங்களை வீட்டடியாகவோ மற்ற விஷயங்களுக்காகவோ மாற்றி கெட்டுப் போகச் செய்வதில் எவருக்கும் உடன்பாடில்லை, எனவே அரசு இவ்வளவு காலத்திற்கு மேல் விளை நிலங்களை மற்றைய பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமெனில் இன்னென்ன வரையறைக்கு உட்பட்டே செய்ய வேண்டும் என அறிவிப்புகள் செய்யலாம், அதனை அரசு அலுவலக சுவர்களிலும் ஒட்டலாம்; பத்திரிகை -தொலைக்காட்சி வாயிலாக அறிவிப்புகள் செய்து விவசாயத்தின் முக்கியத்தை உணர்த்தலாம். மக்களிடம் விழிப்புணர்வு பெறச் செய்து விளைநிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

விவசாயிகளை காப்பதன் மூலம் விளை நிலங்களை காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும். மாறாக, பத்திரப்பதிவுக்கு தடை விதிப்பின்மூலம் அதைச் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

மக்கள் வெள்ளைத்தாளில் தமக்குள்ளாகவே எழுதி சொத்துப் பரிவர்த்தனையை மேற்கொள்ளவில்லை; அரசுப் பதிவகங்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை முத்திரைத் தீர்வையாகச் செலுத்தி தத்தமது சொத்துக்களைப் பரிவர்த்தனை செய்கின்றனர். ஏற்கனவே, பணமதிப்பு நீக்கத்தால் மக்களின் பணமெல்லாம் வங்கிகளில் முடங்கியுள்ளன. இந்நிலையில், அரசாங்க அனுமதி பெற்று வாங்கிய சொத்துக்களையும், பதிவு செய்யவிடாமல் ஆறு மாதமாக முடக்கியுள்ளார்கள், இது எந்த வகையில் நியாயம்? திருமண செலவு, படிப்பு செலவு, மருத்துவ செலவு, வீடுகட்ட- விற்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மன்னர்கள் காலத்தில் செப்பு பட்டயங்கள் மூலம் வாங்கப்பட்ட மனையிடங்களை, வீடுகளை விற்க முடியாது; ‘வெள்ளைக்காரன்’ காலத்தில் வாங்கிய சொத்துக்களை விற்க முடியாது; ‘செட்டி நாட்டு’ அரண்மனைகள் முதல் ஓலைக்குடிசை வரை விற்க முடியாது; இரண்டு வீட்டுக்கு இடையில் இருக்கும் இரண்டு மூன்று சென்ட் இடத்தையும் விற்க முடியாது; மனைப்பிரிவு செய்து சுற்றி வீடாகி நடுவில் கிடக்கும் இடங்களையும் விற்க முடியாது; பாதைகள் போட்டு நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டு மனைப்பிரிவு செய்ததால் அதன் ஊடே விற்காமல் கிடக்கும் உதிரி மனைகளையும் விற்க முடியாது என்ற புதிய விதிகள், சிறு-குறு கட்டுமான முனைவோருக்கும், மக்களுக்கும் பெரும் தண்டனையாகத்தான் அமைந்துள்ளன.

எனவே, விளை நிலங்களைக் காப்பாற்றுங்கள்; வீட்டடி மனைகளாக மாறியவைகளை பரிவர்த்தனைக்கான தடையையும் விலக்குங்கள். அதுவரை, கடந்த ஆறு மாதம் வேலையிழப்பிற்கான இழப்பீடாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10,000 வீதம் வழங்க வேண்டும். இது கோடிக்கணக்கான மக்களின் பிரச்சனை என்பதை அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave A Reply