திருப்பூர்,  கைத்தறி நெசவாளர் பசுமை வீடுகள் திட்டம் போல் வீடில்லாத பாத்திரத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க 29வது மகாசபை வலியுறுத்தியுள்ளது.   திருப்பூர் ஆத்துப்பாளையம் சாலை ஸ்ரீ காமாட்சியம்மன் உலோக பாத்திர தொழிலாளர் சங்கக் கட்டிடத்தில் சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கத்தின் 29வது மகாசபை செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.முத்துசாமி இந்த மகாசபையைத் தொடக்கி வைத்துப் பேசினார். செயலாளர் சி.ஆறுமுகம், பொருளாளர் என்.குபேந்திரன் ஆகியோர் முன்வைத்த வேலையறிக்கை, வரவு செலவு அறிக்கை ஏற்கப்பட்டது. முன்னதாக பிரதிநிதிகள் அறிக்கையின் மீது விவாதித்தனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு:                                                                                                                                  பாத்திரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக சி.ஆறுமுகம், செயலாளராக கே.குப்புசாமி, பொருளாளராக என்.குபேந்திரன், துணைத் தலைவராக கே.ரங்கராஜ், துணைச் செயலாளராக பாலீஸ் ஆறுமுகம் ஆகியோரும், 10 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மகாசபையை நிறைவு செய்து வைத்து சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உரையாற்றினார்.  

தீர்மானங்கள்:                                                                                                                                                          இந்த மகாசபையில் பாத்திரத் தொழிலாளர்களின் முந்தைய கூலி ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் 50 சதவிகிதம் கூடுதல் கூலி வழங்க சிஐடியு சார்பில் கோரிக்கை உருவாக்கி, அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு புதிய கோரிக்கையை பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் அளித்து புதிய ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கைத்தறி நெசவாளர்களுக்கு இருப்பது போல வீடில்லாத பாத்திரத் தொழிலாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டித் தர வேண்டும், முடங்கியுள்ள நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்தி, பாத்திரத் தொழிலாளர்களுக்கான உதவித் தொகையை தங்குதடையின்றி வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகாசபையில் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், செட்டிபாளையம் உள்பட இந்த வட்டாரத்தில் பாத்திரப் பட்டறைகளில் பணியாற்றும் எவர்சில்வர், பித்தளை, செம்பு பாத்திர தயாரிப்பு மற்றும் பாலீஸ் தொழிலாளர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் என்.குபேந்திரன் நன்றி கூறினார்.

Leave A Reply