திருப்பூர், பிப்.12 –
நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி, நாம் செயல்பட வேண்டிய விசயங்களைப் பற்றி நாம் இதுவரைப் படிக்காத, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பேசும் என்று முனைவர் இரா.காளீஸ்வரன் கூறினார்.
14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சனியன்று இரா.காளீஸ்வரன், “பேசும் உன்னிடம் பேசும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
​கனிவான அணுகுமுறை பற்றி பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய நூல், வெண்மணி போராட்டம், பறை அடித்து 8 மணி நேர வேலையை தீர்மானித்தது ஆகியவற்றைப் பற்றிப் பேசும் எதிர் அரசியல் நூல்​, அம்பேத்கார் பற்றி ஜோஸ் எழுதிய நூல், வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்ட துப்பாக்கியை பற்றி எழுதப்பட்ட மரத்துப்பாக்கி நூல், காந்தியை கொல்ல 36 முறை அவரிடம் நெருங்கிச் சென்று கொல்லாமல் மனம் மாறியவர் பற்றிய நூல் என தடை செய்யப்பட்ட, படிக்கப்படாத புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.
இருபத்தைந்து ஆண்டு காலம் லயோலா கல்லூரியின் 24 ஆயிரம் மாணவர்கள் ரத்தமும், சதையுமாக வேலை செய்து பல அரிய தடை செய்யப்பட்ட புத்தகங்கள், அதன் தரவுகளைச் சேகரித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நாம் செயல்பட வேண்டிய பக்கங்கள் உள்ளன என்பதைப் புத்தகங்கள் பேசுகின்றன.
படிக்கத் தவறிய புத்தகங்களைப் படிப்பதற்கு புத்தகக் கண்காட்சிகள் அழைக்கின்றன. புத்தகங்கள் பேசும், படிப்பவர்களிடம் புத்தகங்கள் பேசும், என்று இதுவரை பலரும் கேள்விப்பட்டிராத பல அரிய தகவல்களுடன் முனைவர் காளீஸ்வரன் பேசினார்.
முன்னதாக இந்த நிகழ்வுக்கு பல்லடம் விசைத்தறி உயர்தொழில்நுட்பப் பூங்கா தலைவர் எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். பெஸ்ட் ஆர்.ரவிக்குமார், பரணி எம்.நடராஜ், புரோநிட் எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஐ. அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த எம்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகத் திருவிழாவின் நிகழ்வுகளுக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வரவேற்புக்குழுப் பொருளாளர் எஸ்.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Leave A Reply