சென்னை, பிப். 12 –
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின், இழுத்தடிப்பு தொடர்ந்து நீடிக்கிறது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவரது பதவியை ராஜினாமா செய்து 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை ஆளுநர் எடுக்கவில்லை.

இதனால், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே, ஆள்பிடி வேலைகளும், பேரமும் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுக-வின் சட்டமன்றக்குழுத் தலைவராக- அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவும் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, புதிய அரசு அமையும் வரை, பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு பன்னீர்செல்வத்தைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் எதையும் ஆளுநர் எடுக்கவில்லை. சுமார் 4 நாட்கள் அவர் தமிழகத்திற்கே வராமல், உதகையிலிருந்து தில்லிக்கும், பின்னர் அங்கிருந்து மும்பைக்குமாக சென்று தங்கிக் கொண்டார்.

இந்த 4 நாட்கள் இடைவெளிக்குள்,, சசிகலா தரப்பினர் மிரட்டியதாலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், மக்கள் விரும்பினால் முதல்வராக தொடருவேன் என்றும் பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புதிய பிரச்சனையைக் கிளப்பினார்.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி. மைத்ரேயன், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், து. முனுசாமி மற்றும் 5 எம்எல்ஏ-க்களும் களத்திற்கு வந்தனர். இது அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியாக உருவெடுத்தது. தொடர்ந்து சசிகலா தரப்பை முன்பு ஏற்றுக் கொண்டதாக சொன்ன பலர், திடீரென ஓ. பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இவர்கள் சசிகலா முதல்வர் ஆவதை ஏற்க முடியாது; பன்னீர்செல்வமே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமையன்று தமிழகத்திற்கு வந்த ஆளுநர், மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினரையும், இரவு 7.30 மணிக்கு சசிகலா தலைமையிலான அணியினரையும் சந்தித்தார்.

சசிகலா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி ஆதரவு கையெழுத்து வாங்கியிருக்கிறார்; எனவே, அவருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பினரும், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தன்னையே ஆட்சியமைப்பதற்கு அழைக்க வேண்டும் என்று சசிகலாவும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளிக்கிழமையன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, கடந்த 9 மாதமாக தமிழக அரசு நிர்வாகம் முடங்கிக் கிடப்பதால், தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அதன்மூலம் நிலையான ஆட்சிக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலைக் கையாள்வதில் ஆளுநரின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உரியதாக உள்ளதென்றும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை சட்டமன்ற வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான சூழலில், பாஜக, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சியில் ஆளுநர் மூலம் காய்களை நகர்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும், பெரும்பான்மையைத் தீர்மானிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான்; எனவே ஆளுநர் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை, எந்த ஒரு தரப்பினரையும் ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கவில்லை. தன்னுடைய நிலை என்ன என்பதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தின் நிலை குறித்து, குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ அறிக்கை எதுவும் அவர் அனுப்பவில்லை. இவ்விஷயத்தில் இழுத்தடிப்பு நிலையையே ஆளுநர் மேற்கொண்டு வருகிறார்.

இதனால், தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. அரசு நிர்வாகப் பணிகள் முடக்கம் கண்டுள்ளன. இது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: