சென்னை, பிப். 12 –
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில், 10 அதிமுக எம்.பி.க்கள் இணைந்துள்ளனர்.

நடிகர்கள் ராமராஜன், தியாகு, தேமுதிக-விலிந்து அதிமுகவில் இணைந்த நடிகர் அருண்பாண்டியன் ஆகியோரும் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதல்வர் பதவிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் போர்க்கொடி தூக்கிய நிலையில், அவருக்கு அதிமுக கட்சிக்குள் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் து. முனுசாமி, நத்தம் விசுவநாதன், வி.மைத்ரேயன் எம்.பி. என்று துவங்கிய அந்த ஆதரவு, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரன், திருவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன் என விரிவடைந்தது.
சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்மொழிந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் நிதியமைச்சர் சி. பொன்னையன் ஆகியோரும் பன்னீர்செல்வம் அணிக்கு வந்தனர். ஆட்சியமைக்க உரிமை கோரி சசிகலா, ஆளுநரைச் சந்தித்தபோது, 10 அமைச்சர்கள் உடன் சென்றனர். அவர்களில் ஒருவர் ‘மாஃபா’ பாண்டியராஜன். இவரும் திடீரென பன்னீர் செல்வம் பக்கம் சாய்ந்தார்.

கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் குமார், நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் சுந்தரம், திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா, திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோரும் வரிசையாக ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்து, அவருக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

சனிக்கிழமை வரை 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக திரும்பினர்.

அதிமுக-வின் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் ஆகிய அந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஞாயிறன்று முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், முன்னாள் காதி அமைச்சர் பூனாட்சி, நடிகர்கள் ராமராஜன், தியாகு, மனோபாலா, தேமுதிக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தவர்களும், முன்னாள் எம்எல்ஏ-க்களுமான நடிகர் அருண்பாண்டியன், சுந்தர்ராஜன் ஆகியோரும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.