“ஒவ்வொருவருக்கும், ஆணாயினும் பெண்ணாயினும் சொந்தக் கதை உண்டு. ஒருவரின் தனிப்பட்ட
வாழ்க்கை இன்னொருவருக்குக் கற்பனை போல் தோன்றும் என்ன நீங்கள் புரிந்து கொண்ட பிறகே எனது உலகத்திற்குள் நீங்கள் நுழைய வேண்டும். அவ்வளவு சாதாரணமானதாக இல்லாத நாட்டின் சாதாரண கிராமத்திலிருந்து வந்த ஒரு சாதாரண மாணவனின் அரசியல் பயணத்தில் என்னோடு பயணிக்க வரவேற்கிறேன்” என்ற ஆரம்ப அழைப்போடு அந்த நூல் தொடங்குகிறது.

சாதாரண கிராமத்தின் சாதாரண மாணவன் யார்? அவனது சாதாரண கிராமத்தின் பெயர் மஸ்னாத்பூர். அவனது தந்தைபெயர் ஜெய் சங்கர் சிங்; தாயாரின் பெயர் மீனாதேவி.
அப்பாவை விட அம்மா அதிகம் படித்தவர். அதாவது அப்பா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. அம்மா பத்தாம் வகுப்பு பாஸ். செய்திருக்கிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பம்; சொந்தமாக நில மில்லாத அப்பா விவசாயத் தொழிலாளி; அம்மா அங்கன்வாடி ஊழியர். மாத ஊதியம் 3,000 ரூபாய். இந்த ஊதியத்தில் தான் ஆறு வயிறுகள் பசியாறி வாழவேண்டும்.

சிறுவயதில் பள்ளிக்குப் படிக்கச் செல்வதும் பள்ளிக்கு அனுப்புவதும் எல்லோரும் கடந்துவந்த கழிப்பறை வசதி கூட இருக்காது. இந்தியா முழுவதும் இது தான் நிலை. மஸ்னாத் பூர் மட்டம் விதிவிலக்காக இருக்குமா என்ன?

மாற்றி உடுத்த கால்சட்டையும் மேல்சட்டையும் இல்லாமல் ஒரு ஜோடி பள்ளிக்கு அணிந்துசெல்ல இன்னொரு ஜாடி துவைத்து காயவைக்க என்பதுதான் அவனது வாழ்க்கை சூழல்.

1985ல் தொடங்கி நவோதயா பள்ளியில் படித்த அனுபவம், தனியார் பள்ளி அனுபவம், இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட வசதியற்றோர் வசதியுள்ளோர் இடையேயான ஏற்றத்தாழ்வு அனுபவம் என கல்விக் கூடங்கள் கற்றுத்தந்ததை விட வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்களால் அந்த மாணவன் புடம் போடப்பட்டிருந்தான்.

பத்தாம் வகுப்புக்குப்பின் இன்டர்மிடியேட் படிப்பதற்காக கிராமத்திலிருந்து மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு வந்தபின் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. சாதி, மதங்களின் பேரால் கட்டமைக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள் இங்கே கூடுதல் பாடமாகக் கிடைக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான கசப்புணர்வைத் தூண்டி முஸ்லிம்களுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்தும் ஆர்எஸ்எஸ் கும்பலின் செயலை நேரடியாகக் கண்டு மனம் வெதும்பும் இளமனசு.

கல்லூரிக்காலத்தில் வயதுக்கே உரிய குறும்புகளுடன் வாழ்ந்ததை அசைபோடும் நினைவுகள். அதனூடாகக் கண்டையும் வர்க்க அரசியல் இயல்பாகவே ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாலும் ஈர்க்கப்பட்டு மனதில் ஊறிய தேட்டம்.
இவற்றையெல்லாம் சுமந்துகொண்டு பாட்னாவிலிருந்து தில்லிக்கு வரும் காலகட்டத்தில், புத்தகக் கண்காட்சி மீது ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்தும் தாக்குதல் அந்த மாணவனை மீண்டும் உசுப்பிவிடுகிறது. மாணவர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; ஆய்வு செய்ய வேண்டும்; ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கண்டடைய வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக புத்தகங்களைக் கிழித்து வீசுவது; ஸ்டால்களை உடைத்தெறிவது என்பதெல்லாம் எப்படி சாத்தியம், ஏன் இந்த இழிநிலை என்று லட்சிய மாணவனாக வளர்கிறான்.

கல்லூரி படிப்பு முடித்து ஆய்வு மாணவனாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் அடியெடுத்து
வைக்கும் அவனது வாழ்க்கை பல திருப்பு முனைகளைக் காண்கிறது.

2016 பிப்ரவரி 8ம் தேதி வரை வாழும் இடத்தில் மட்டும் அறியப்பட்டவனாக இருந்த மாணவன் 9ம்தேதியிலிருந்து நாடே அறிந்து கொள்ளும் மாணவனாக உருவெடுத்தான்.

அந்த மாணவனே குறிப்பிட்டிருப்பது போல் 9ஆம் தேதிகாலை தொலைக்காட்சி அலைவரிசைகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள். நாடாளுமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டதா, அவரது நினைவாக்கக் கூட்டம் நடத்தப்பட்டதா, என அடுக்கடுக்கான கேள்விகள், தொலைக்காட்சிகளில் நேரலை பேட்டிகள் என பரபரப்பாகிறது. அந்த மாணவரின் வாழ்க்கை யாரும்
எதிர்பாராத வகையில் தேசத்துரோக வழக்கு, கைது, சிறை என அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்துத் தரப்பினரிடமும் கொதிநிலையை உருவாக்குகிறது. ஏபிவிபி என்ற ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பால் பலிகடா வாக்கப்பட்ட அந்த மாணவர்தான் கன்னையகுமார்.

கல்வித்துறை பொறுப்புவகித்த (மனு) ஸ்மிருதி இரானியின் நெருக்குதலால் மனமுடைந்த ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் (2016-ஜனவரி -17) மனக்காயம் ஆறுவதற்கு முன் கன்னைய குமாரின் கைது. மாணவர்கள் சமூகத்தை – குறிப்பாக இடதுசாரி முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர்களை சங்பரிவாரத்தின் தொடங்குசதையான ஏபிவிபியால் நடத்த
ப்பட்ட தாக்குதல் பின்னணியில் தனது வாழ்க்கைச் சம்பவங்கள் நினைவுகளை தொகுத்து ஒரு நூலாக்கியிருக்கிறார் கன்னைய குமார். ஃப்ரம் பிஹார் டூ திஹார் (பிஹாரிலிருந்து திஹார் வரை) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆங்கில நூல் கன்னைய குமாரின் இளம்பவருவ வாழ்க்கைகளையும் தொடர்ச்சியான போராட்ட மன நிலையையும் புரிந்துகொள்ள உதவுகிறது. விரைவில் தமிழிலும் வெளிவந்தால் வாசகப்பரப்பு விரியும்.

ஃப்ரம் பிஹார் டூ திஹார்
ஆங்கில நூல்
ஆசிரியர்: கன்னைய குமார்
வெளியீடு: ஜூக்கர் நாட் புக்ஸ்,
கே.எஸ்.ஹவுஸ், 118, ஷாபூர் ஜாட்,
புதுதில்லி – 110049
பக்:253- விலை ரூ.250/-

Leave A Reply

%d bloggers like this: