புதுதில்லி, பிப். 10 –
ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு என்ன? என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய சுப்பிரமணியசாமிக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ‘ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்தை’ பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு கொண்டு செல்லாமலேயே- அந்நிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பங்கு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.ஸ். கேஹர் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நேரில் ஆஜரான சுப்பிரமணியசாமி, “ரூ. 600 கோடிக்கும் அதிகமான எந்த ஒரு ஒப்பந்தமாயினும் அனுமதி வழங்குவதற்கு முன் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு பார்வைக்குக் கொண்டு வரப்படவேண்டும்; ஆனால், ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தம் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாக இருந்தும், அது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின்பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

அவரிடம், “இந்த ஒப்பந்தம் ரூ. 600 கோடிக்கும் அதிகமானது என்பது ப.சிதம்பரத்திற்கு தெரியுமா? இதனை பொருளாதார விவகார அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதை சிதம்பரம் அறிந்திருந்தாரா?” என்று நீதிபதி கேஹர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “ஒப்பந்தத்தின்போது சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார்; அந்நிய முதலீட்டு வாரியம் முன்பு இது முன்மொழியப்பட்டுள்ளது, எனவே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம்” என்று சுப்பிரமணியசாமி கூறினார். “அப்படியானால், ப.சிதம்பரம் இது பற்றி தெரிந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரம் உங்களிடம் என்ன உள்ளது?” என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, சுப்பிரமணியசாமி அவரிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு 2 வாரம் அவகாசம் வழங்கினர். “புகாருக்கான தகுந்த ஆதாரங்கள் இருந்தால், ஒருவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும் நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம்” என்றும் விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave A Reply