மதுரை, பிப்.9-
மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழனன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக, உற்சாகத்துடன் நடைபெற்றது. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பாலமேட்டிலுள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாணவர்கள், வாலிபர்கள் உட்பட லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
பாலமேடு கிராம பொது மஞ்சமலைசாமி மடத்துக் கமிட்டியினர் மதுரை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார். முன்னதாக ஆட்சியர் முன்னிலையில் வாடிவாசல் முன்பாக கிராமக்கமிட்டியினர் மற்றும் மாடு பிடி வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் பங்கேற்க 1603 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 1200 வீரர்கள் பங்கேற்றனர். 850 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஒவ்வொரு சுற்றிலும் 200 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய சிறந்த வீரர்கள் அடுத்த சுற்றுப் போட்டியிலும் களமிறக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் காணும் வகையில் பேருந்துநிலையம் உள்ளிட்ட பல இடங்களில் எல்இடி ஸ்கிரீன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி ஒளிபரப்பப்பட்டது.
காயமடையும் வீரர்கள், காளைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்குழுவினர் ஏற்பாடும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மாலை 4 மணிவரை 354 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ராயல் என்பீல்டு புல்லட் ,சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக் காசுகள், எல்இடி டி.வி., பீரோ, பித்தளை – எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாமல் ஜல்லிக்கட்டு காளைகளே ஏராளமான பரிசுகளை தட்டிச்சென்றன.
ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்களுக்கு தனியாக கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆங்காங்கே மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
முதல் குழுவில் 4 முறை காளைகளை அணைந்த வீரர் அரிட்டாபட்டி கருப்பணன் என்பவர் தொடர்ச்சியாக 4 சுற்றிலும் பங்கேற்று 9 காளைகள் அணைந்து ராயல் என்பீல்டு பைக்கை தட்டிச் சென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.