இம்பால் , பிப். 08 –

மணிப்பூரில் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,அம்மாநில முதலமைச்சருமான ஓக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் இரோம் சர்மிளா போட்டியிட உள்ளார்.

மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற புதிய கட்சியை அண்மையில் தொடங்கிய அவர் தன்னுடைய கோரிக்கைக்கு அரசு செவிமடுக்காததால் , தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என கூறி கடந்த ஆண்டு தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.இதனிடையே, மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 3-ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
அதில் மாநிலத்தில் தொடர்ந்து 3-ஆவது முறை முதலமைச்சராக உள்ள இபோபி சிங், தெளபால் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வரின் சொந்தத் தொகுதியான தெளபால் மற்றும் தாம் வசித்து வரும் குராய் ஆகிய இரு தொகுதிகளில் இரோம் ஷர்மிளா போட்டியிடவுள்ளதாக மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் எரென்ட்ரோ லீசோன்பம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.