திருப்பூர், பிப்.7 –
தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 16 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், செல்லா பண நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், மர்ம காய்ச்சல் பரவுவதைத் தடுக்க சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் 16 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் செவ்வாயன்று புஷ்பா சந்திப்பு அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை ஏற்றார். மாநகரச் செயலாளர் பி.முருகேசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 60 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெயபால் உள்பட சுமார் 50 பேர் கைதானார்கள்.
வேலம்பாளையம் நகரம்
வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் அவிநாசி சாலை பெரியார் காலனி முன்பிருந்து நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சற்றுத் தொலைவில் அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 50 பேர் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு ஒன்றியம்
வடக்கு ஒன்றியக்குழு சார்பில் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் முன்பாக சாலை மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 85 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தெற்கு ஒன்றியக்குழு
திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு அருகில் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணி மற்றும் பெண்கள் உள்பட சுமார் 75 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல் பெரியாண்டிபாளையம் பிரிவில் மங்கலம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், ஜி.சாவித்திரி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் ஈ.அங்குலட்சுமி உள்பட சுமார் 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவிநாசி நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாலச்சந்தர் மருத்துவமனை வரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி தலைமையில் சுமார் 120 பேர் ஊர்வலமாக வந்தனர். வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பெண்கள் சுமார் 35 பேர் பங்கேற்றனர்.
பொங்கலூரில் ஒன்றிய அலுவலகம் முன்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பவித்ராதேவி, ஜி.சம்பத் உள்பட 30 பேர் கைதானார்கள்.
பல்லடத்தில் ஒன்றியச் செயலாளர் வை.பழனிசாமி தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி உள்பட 25 பேர் அண்ணா சிலை பகுதியில் மறியல் செய்ய முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காங்கயத்தில் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சந்திரன், தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி உள்பட சுமார் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் ஊத்துக்குளி வேப்பமரம் பஸ் நிறுத்தம் முன்பிருந்து தாலுகா செயலாளர் கை.குழந்தைசாமி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாங்க் ஆப் பரோடா நோக்கி ஊர்வலமாக வந்தனர். அந்த வங்கி முன்பாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் 33 பேர் உள்பட சுமார் 90 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இத்துடன் தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி உள்பட 16 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரம் பேர் கைதானார்கள்.

Leave A Reply